மஸ்கெலியா பிரதேசமானது கிட்டதட்ட 60000க்கும் அதிகமான சனத்தொகையை உள்ளடக்கிய ஒரு பாரிய பிரதேசம் ஆனாலும் இவ்வளவு பெரிய பிரதேசத்தில் ஒரு மின்தகன சாலை இல்லாதது மிக முக்கிய பிரச்சினை ஆகும்.
அதாவது மஸ்கெலியா பிரதேசத்தில் ஏற்படும் மரண சம்பங்கள் அனைத்தும் PCR பரிசோதனைக்காக கிளங்கன் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு தொற்று உறுதி செய்யும் பிரேதங்களை நோர்வுட் தகனசாலையிலேயே தகனம் செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள் அதாவது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் மஸ்கெலியாவில் இருந்து கிளங்கன் வரை பயணிப்பதே மக்களுக்கு பெரும் பிரச்சினையாக இருக்கிறது.
அது மாத்திரமின்றி வைத்தியசாலையில் பிரேதத்தை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் மக்கள் பெரும் அசௌகரியங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது ஆகவேதான் மஸ்கெலியா பகுதியில் இறக்கின்றவர்களை மஸ்கெலியா வைத்தியசாலையில் PCR பரிசோதனை செய்தால் இந்த மக்களின் சுமை குறையும் எதிர்காலத்தில் மஸ்கெலியா வைத்தியசாலை கொறோனா சிகிச்சை நிலையமாக மாற்றப்பட இருப்பதால் இந்த வேலைத் திட்டத்திற்கு சாதகமானதாக அமையும்.
எனவேதான் மஸ்கெலியா பிரதேசத்தில் ஒரு தகனசாலை அமைக்கப்பட்டால் எமது மக்களுக்கு இலகுவான முறையில் இவ் விடயத்தை முன்னடத்தி செல்ல முடியும் என்ற விடையத்தை வலியுறுத்தி நேற்றுமுன்தின சபை அமர்வில்(13-09-2021) பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக் அவர்களினால் பிரேரனை முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
பிரேரணை நிறைவேற்றப்பட்தை அடுத்து இது சம்மந்தப்பட்ட சுகாதார அமைச்சு மற்றும் மாவட்ட செயலகம் மற்றும் உரிய தரப்பினர்களுக்கு பிரேரணை கடிதம் அனுப்ப தயார் நிலையில் இருப்பதாகவும் சபையில் முன் வைக்கப்பட்ட இந்த பிரேரணைக்கு ஆதரவளித்த சபையின் தவிசாளர், பிரதி தவிசாளர், உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
செய்தி:- ரொமேஸ் தர்மசீலன் – மஸ்கெலியா.
