“மஹிந்த ராஜபக்சவால்தான் வடக்கு மாகாணம் எல்லா வழிகளிலும் முன்னேறியது. பிரிவினைவாத சிந்தனையுடைய ஒரு சிலரே மஹிந்தவின் வெளியேற்றத்தை கொண்டாடுகின்றனர்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது,
” மஹிந்த ராஜபக்ச விஜேராம அரச மாளிகையில் இருந்து வெளியேறியது தொடர்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில் யாழிலுள்ள சிலரின் சமூகவலைத்தள பதிவுகள் அமைந்திருந்தன. இது பற்றி உங்களின் கருத்து என்ன.” என்று வினவப்பட்டது.
இதற்கு பதிலளித்த சஞ்ஜீவ எதிரிமான்ன,
” வடக்கிலுள்ள ஒட்டுமொத்த தமிழ் மக்களின் நிலைப்பாடு அல்ல இது. போரை முடிவுக்கு கொண்டுவந்தமை தொடர்பில் சிலர் மாறுபட்ட கருத்துடன் இருக்கலாம்.
ஆனால் வடக்கு மக்களால் கோரப்பட்ட அமைதியான அரசியல் சூழ்நிலையை மஹிந்த ராஜபக்சவே ஏற்படுத்திக்கொடுத்தார். இதனை வடக்கு மறக்கவில்லை.” – என்று குறிப்பிட்டார்.
அத்துடன், வடக்கு மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் தோல்வி என தெரிந்தும் தேர்தல் நடத்தப்பட்டது.
புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து தமது உயிரை பாதுகாத்துக்கொள்வதற்காக அரசாங்கம் பக்கம் வந்த 3 லட்சம் பேர் பாதுக்காக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டன.
வடக்கில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டன, காணிகள் விடுவிக்கப்பட்டன. வீடுகள் அமைக்கப்பட்டு மீள்குடியேற்றமும் செய்யப்பட்டது. சரணடைந்த 11,900 முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டன.
மஹிந்த அரசால்தான் வடக்கு முன்னேற்றம் கண்டது. இது வடக்கில் பெரும்பான்மையான மக்களுக்கு தெரியும். எனினும், பிரிவினைவாத சிந்தனையில் உள்ள சிலர் இருக்கலாம். அவர்களை திருப்திப்படுத்தும் விதத்திலேயே இந்த அரசு செயற்படுகின்றது.” – என மொட்டு கட்சியின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.