“ கடாபியை கொலை செய்ததுபோல முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்கு தமிழ் டயஸ்போராக்கள் நிதி வழங்கியுள்ளனர்.” – என்று ராவனா பலய அமைப்பின் பொதுச்செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்தார்.
நாமல் ராஜபக்சவுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ தாய் நாட்டை மீட்டெடுத்த மஹிந்த ராஜபக்சவை விட்டுச் செல்வதற்கு நாம் தயாரில்லை. வரிசைகளை இல்லாது செய்த ரணிலைவிட, புலிகளை ஒழித்த மஹிந்தவே மேலானவர். போரை முடிக்காவிட்டால் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி புலிகள் தாக்குதல் நடத்தி இருக்கக்கூடும். அறகலயவின் பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க தரப்பே உள்ளது. சூழ்ச்சி மூலமே கோட்டா ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
மே 9 ஆம் திகதி மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய திட்டம் இருந்தது. அலரிமாளிகை சுற்றிவளைக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு பிரதானிகள் தொலைபேசி அழைப்புகளுக்குகூட பதிலளிக்கவில்லை. கடாபியை கொலை செய்ததுபோல மஹிந்த ராஜபக்சவை கொலை செய்வதற்குரிய தேவை உள்ள தமிழ் டயஸ்போராக்கள், எம்மவர்களுக்கு பெருமளவு நிதியை வழங்கியுள்ளனர்.
மஹிந்த ராஜபக்சவை விட்டுச்சென்றவர்களை பொதுத்தேர்தலில் மண்கவ்வ வைத்துவிட்டே நாம் பின்நோக்கி பார்ப்போம். எமது நாட்டின் இறையாண்மை, இனம் மற்றும் மதத்தை பாதுகாக்க மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்சவுக்கே வாக்களிக்க வேண்டும். அவர் மதத்தை, இனத்தைக் காட்டிக்கொடுக்காத நபர்.” – என்றார்.










