பிரதமர் பதவியை ஏற்குமாறு விடுத்த அழைப்பை கருஜயசூரியவும், சஜித் பிரேமதாசவும் ஏற்க மறுத்தாலேயே மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்க வேண்டிய நிலை அன்று ஏற்பட்டது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மஹிந்த ராஜபக்சவை நான் பிரதமர் ஆக்கியமை தொடர்பில் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், பாதுகாப்பு சபையைக் கூட்டுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நான் நிராகரித்தேன் எனவும் இங்கு உரையாற்றிய உறுப்பினர் குறிப்பிட்டிருந்தார். அவ்வாறு என்னிடம் கோரிக்கை விடுக்கப்படவில்லை. அந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன்.
மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்குவதற்கு முன்னர் கருஜயசூரியவிடம் நான்கு தடவைகள் பேச்சு நடத்தினேன். கொள்கை முரண்பாடு காரணமாக ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாது , எனவே, பிரதமர் பதவியை ஏற்குமாறு அழைப்பு விடுத்தேன். ஆனால் அதனை அவர் ஏற்கவில்லை. அதன்பின்னர் சஜித் பிரேமதாசவுக்கும் பிரதமர் பதவியை ஏற்க அழைப்பு விடுத்தேன். அவரும் அதனை விரும்பவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த 2ஆம், 3ஆம் நிலையில் இருந்த தலைவர்கள் அழைப்பை ஏற்க மறுத்தால்தான் மஹிந்தவை நியமிக்க வேண்டி ஏற்பட்டது.” – என்றார் மைத்திரி.










