மாகாண தேர்தலை மக்கள் கோரவில்லை இந்தியாவே ஆர்வம்காட்டி வருகின்றது

இலங்கையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் இந்தியாவே தற்போது கூடுதல் அக்கறை காட்டிவருவதாக ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நளின் ஜயதிஸ்ஸ சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைகளுக்கான தேர்தல் ஈராண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. அப்படி இருந்தும் குறித்த தேர்தலை விரைவில் நடத்துமாறு மக்கள் கோரவில்லை. அதனை வலியுறுத்தி போராட்டமும் நடத்தவில்லை.

மாகாணசபைத் தேர்தல் நடைபெறவில்ல என்பதால் மாகாணசபை கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படவில்லை. மாகாணசபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நெருக்கடி ஏற்படவில்லை. இந்நிலையில் இரு தரப்புகளே தேர்தலை கோருகின்றன.

முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களும், எதிர்காலத்தில் மாகாணசபைகளுக்கு வருவதற்கு எதிர்ப்பார்ப்பவர்களுமே தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர். அடுத்ததாக இது விடயத்தில் இந்தியா ஆர்வம் காட்டிவருகின்றது.

அண்மையில்கூட வடக்குக்கு சென்றிருந்த இந்திய தூதுவர், அங்குள்ள அனைத்துக் கட்சிகளையும் சந்தித்து, மாகாண தேர்தலுக்கான அழுத்தத்தை கொடுக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார். இதன்படி தேர்தலை நடத்திக்கொள்வதிலும் 13 ஐ முழுமையாக அமுல்படுத்துவதிலும் இந்தியாவுக்கு உள்ள அதிக அக்கறை புலப்படுகின்றது.” – என்றார்.

Related Articles

Latest Articles