2022 ஏப்ரல் மாதத்துக்குள் மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அத்தேர்தல் தொடர்பில் பெரிய மற்றும் சிறிய அரசியல் கட்சிகள் அவதானம் செலுத்தியுள்ளன.
தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, எப்படி போட்டியிடுவது என்பது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் பங்காளிக்கட்சியாக அங்கம் வகிக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் தேர்தல் களம் குறித்து கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளது.

நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் கூட்டணியாக மொட்டு சின்னத்திலும், சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம், மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டம், வடக்கில் வவுனியா மாவட்டம், மத்திய மாகாணத்தில் கண்டி மாவட்டம் ஆகியவற்றில் சேவல் சின்னத்திலும் போட்டியிடும் என எதிர்ப்பார்கக்ப்படுகின்றது.
இது தொடர்பில் கட்சியின் பொதுச்செயலாளர்களுக்கு மாவட்ட அரசியல் பிரமுகர்களால் யோசனை முன்வைக்கப்பட்டுவருவதாகவும், உரிய கலந்துரையாடல்களின் பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் தெரியவருகின்றது.

” மாகாண தேர்தல் தொடர்பில் எமது கட்சி இன்னும் முடிவு எதையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிப்பு உத்தியோகப்பூர்வமாக வெளிவரட்டும். அதன்பின்னர் ஏனைய விடயங்கள் பற்றி கதைக்கலாம்.” – என இ.தொ.கா. பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டார்.










