மாகாணசபைகளின் கோமா நிலைக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளே காரணம் என்று மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பயம் காரணமாகவே மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டமூலத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வழங்கி மாகாணசபைகளை கோமா நிலைக்கு கொண்டு சென்றதில் பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த அத்தனை சிறுபான்மை கட்சிகளும் பெரும் பங்காற்றி இருந்தன. இதனால் இன்று 13 ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு ஏற்பட்டிருக்கின்ற ஆபத்துக்கு தமிழ் முஸ்லிம் கட்சிகள் பொறுப்பேற்க வேண்டும்.
முன்னைய பாராளுமன்றத்தில் அங்கம் வகித்த கட்சிகள் நாட்டினதும் மக்களினதும் நலன் கருதி செயற்படாமல் தத்தமது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செய்யப்பட்டதன் விளைவாகவே மாகாணசபைகளுக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
ஐக்கிய தேசிய கட்சி தேர்தலை எதிர் நோக்குவதற்கு பயந்தே மாகாணசபை தேர்தல் திருத்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெறுவதற்கு எவ்வித நிபந்தனையும் இல்லாமல் அத்தனை சிறுபான்மை கட்சிகளும் ஆதரவை வழங்கின. அதனாலேயே தற்போது மாகாண சபைகள் கோமா நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதற்கு பிரதான காரணமாகும்.
தற்போதைய அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலம் இருப்பதனால் கோமா நிலையில் இருக்கும் மாகாண சபைகளை கொலை செய்வதா? அல்லது உயிரூட்டி இயங்க வைப்பதா? என்ற தீர்மானத்தை மேற்கொள்ளும் வல்லமை இருக்கின்றது. ஒரு வேளை அரசாங்கம் மாகாணசபைகளை ரத்து செய்யும் தீர்மானத்தை எடுத்தாள் அதற்கு வழி சமைத்துக் கொடுத்த ஐக்கிய தேசியக் கட்சியும் அவர்களோடு இணைந்து செயற்பட்ட அத்தனை சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளுமே காரணமாகும்.
கடந்த அரசாங்க காலத்தில் மாகாண சபை தேர்தல் திருத்த சட்ட மூலத்துக்கு ஆதரவு அளித்ததன் மூலம் நாட்டின் அதிகார பகிர்வுக்கு கிடைத்திருந்த சிறிய சந்தர்ப்பமும் தற்போது ஆபத்தை எதிர்நோக்கி கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கத்தின் அனுசரணையோடு கிடைத்த 13ஆவது திருத்தச்சட்டத்தின் அனுகூலங்கள் இல்லாமல் ஆக்கப்பட்டாள் எதிர்காலத்தில் அதிகாரப் பகிர்வை பெற்றுத்தருமாறு எவரிடமும் கையேந்தி நிற்க முடியாது. இந்தியாவும் சர்வதேசமும் கொடுத்து வருகின்ற அழுத்தங்கள் சிறுபான்மை மக்களுக்கு ஆறுதலை கொடுத்தாலும் இதுவரை தீர்வை கொடுக்க வில்லை. இந்த நிலையில் இருக்கின்ற 13ம் இழந்து நிற்கின்ற நிலைமையை ஏற்படுமாக இருந்தால் நாட்டின் அதிகார பகிர்வுக்கான அடிப்படையே இல்லாமல் செய்யப்படும்.
தற்போது நாட்டில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் சம்பந்தமாக பரவலாக பேசப்படுகின்றது. தற்போதைய அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் இந்த 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்வதற்கு போதுமானதாகும். இந்த நிலையில் சிறுபான்மை தமிழ் முஸ்லிம் கட்சிகளுக்கு மாகாணசபைத் தேர்தல் திருத்தச் சட்ட மூலத்தின் மூலம் ஏற்பட்ட கலங்க த்திலிருந்து மீள்வதற்கு 20 ஆவது திருத்தச் சட்டமூலத்தை ஆதரிப்பதும் அதே நேரத்தில் மாகாணசபைகளுக்கு தேர்தலை நடத்துவது தொடர்பான சட்டமூலத்தை இருபதாவது அரசியலமைப்பு திருத்தத்துடன் சேர்த்து ஒரே நேரத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” – என்றார்.