மாகாணசபைத் தேர்தலை இலங்கை நடத்த வேண்டும் – மோடி வலியுறுத்து

” இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என இந்தியா நம்புகின்றது. அதேபோல, சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுசீரமைப்பு செயல்முறையை இலங்கை முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதுடன், இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மரியாதையும் கௌரவமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்ய வேண்டும்.” – என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” இன்று நாம் எமது பொருளாதார பங்குடைமைக்கான கொள்கை ஆவணத்தை நிறவேற்றியுள்ளோம். கடல் மற்றும் வான் மார்க்கமானதும், இரு நாடுகளினதும் மக்கள் இடையிலானதுமான தொடர்புகளையும், எரிசக்தி துறை சார்ந்த தொடர்புகளையும் வலுவாக்குவதே இதன் நோக்கம்.

மேலும் சுற்றுலாத்துறை, மின்சக்தி, வர்த்தகம், உயர் கல்வி, திறன் விருத்தி ஆகியவற்றில் பரஸ்பர ஒத்துழைப்பினை விஸ்தரிப்பதும் இதன் இலக்காகுமென்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இலங்கைக்காக இந்தியா கொண்டுள்ள நீண்ட அர்ப்பணிப்பினையும் இது குறித்து நிற்கின்றது.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கை குறித்த பேச்சுகளை விரைவில் ஆரம்பிப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக ஒத்துழைப்புக்கான புதிய வழிகளை இது உருவாக்கும்.

அதேபோல, இந்தியா இலங்கை இடையிலான வான் தொடர்புகளை மேம்படுத்தவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அத்துடன் மக்களின்போக்குவரத்தினையும் வர்த்தக நடவடிக்கையையும் அதிரிப்பதற்காக இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழகத்தின் நாகபட்டினம் இடையில் கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான மின் கட்டமைப்பை இணைக்கும் பணிகளை விரைவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பெட்ரோலிய விநியோகத்துக்கான குழாய் கட்டமைப்பை அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றிய ஆய்வு முன்னெடுக்கப்படும்.

இது தவிர, தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கை காரணமாக இலங்கையில் UPI முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் இதன்காரணமாக நிதி தொழில்நுட்ப சேவைகளை விஸ்தரிக்கவும் வாய்ப்புகள் உருவாகும்.

மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சனைகள் குறித்தும் இன்று விவாதித்தோம். இந்த விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

இலங்கையில் புனரமைப்பு மற்றும் நல்லிணக்கம் குறித்தும் இச்சந்திப்புகளில் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைவரையும் உள்ளடக்கிய தனது விசாலமான அணுகுமுறை குறித்து என்னிடம் தெரிவித்தார்.

இலங்கை அரசு தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். அதேபோல, சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான மறுசீரமைப்பு செயல்முறையை இலங்கை முன்னெடுத்துச்செல்லும். அத்துடன் பதின்மூன்றாவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குமான அதன் கடப்பாட்டை நிறைவேற்றுவதுடன், இலங்கைத் தமிழ் சமூகத்திற்கு மரியாதையும் கௌரவமும் நிறைந்த வாழ்வை இலங்கை உறுதி செய்யும்.

அதேசமயம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தமிழ் சமூகம் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவடைகின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில், இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி தமிழ் மக்களுக்காக ரூ.75 கோடி மதிப்புள்ள பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் அபிவிருத்தி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து பங்களிப்பு வழங்கும். ” – என்றார்.

Related Articles

Latest Articles