மாகாணசபைத் தேர்தலை எந்த முறைமையின்கீழ் நடத்துவது என்பது குறித்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி இறுதி முடிவை எடுப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானித்துள்ளார் – என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த இணையவழி ஊடகவியலாளர் மாநாடு நேற்று நடைபெற்றது. இதன்போது மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மாகாணசபைத் தேர்தல் முறைமையை மறுசீரமைப்பது தொடர்பான சட்டமூலம் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. ஸ்தீரமானதொரு மாகாணசபையை உருவாக்கும் நோக்கில் போனஸ் ஆசனங்களை அதிகரிக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டது. தற்போது மாகாணமொன்றில் அதிகூடிய வாக்குகளைப்பெறும் கட்சிக்கு 2 போனஸ் ஆசனம் வழங்கப்படுகின்றது. மேற்படி யோசனையின் பிரகாரம் மாவட்ட ரீதியில் 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்படும்.
அந்தவகையில் மேல் மாகாணத்தில் 3 மாவட்டங்கள் உள்ளன. இதுவரை 2 போனஸ் ஆசனங்கள் வழங்கப்பட்ட நிலையில் அந்த எண்ணிக்கை 6 ஆக அதிகரிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. அதேபோல வடமத்திய மாகாணத்தில் இரண்டு மாவட்டங்கள் உள்ளன. அங்கு போனஸ் ஆசனங்களின் எண்ணிக்கையை 4 ஆக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக பிரதேசத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய பிரதிநிதி இருக்க வேண்டும் என்பதால் 70 வீதம் தொகுதி அடிப்படையிலும் 30 வீதம் விகிதாசார அடிப்படையிலும் தெரிவுசெய்வதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது.
அத்துடன், தொகுதியொன்றில் ஒரு கட்சி மூன்று வேட்பாளர்களை நிறுத்த முடியும் என்ற திட்டமும் முன்வைக்கப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சர்களும் கருத்துகளை முன்வைத்தனர். இதனையடுத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தைக்கூட்டி, இறுதி முடிவொன்றை எடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்தார்.
நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக்கட்சிகளும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை. எனவே, அக்கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ” என்றார்.