இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டித்தொடரொன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ரி – 20 உலகக்கிண்ணத் தொடரில் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அண்மையில் மோதின.
இப்போட்டியானது அலரிமாளிகையில் பிரமாண்டமானதொரு திரையில் ஒளிபரப்பட்டது. இப்போட்டியை காண்பதற்கு மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் மற்றும் நியூசிலாந்து தூதரகத்தின் அதிகாரிகள் சிலரும் வந்திருந்தனர். ஆளுங்கட்சியின் இளம் எம்.பிக்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது இலங்கை மற்றும் மாலைதீவு நாடுகளின் எம்.பிக்களுக்கிடையில் கிரிக்கெட் போட்டித்தொடரொன்றை நடத்தும் அழைப்பை மாலைதீவு விளையாட்டுத்துறை அமைச்சர் விடுத்தார். இதற்கு இலங்கை தரப்பிலும் பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
மாலைதீவில் நடைபெறும் போட்டிக்கான செலவை அணியில் பங்கேற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், இலங்கையில் நடைபெறும் போட்டிக்கான செலவை இலங்கை அணியில் இடம்பெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
மாலைதீவு செல்லும் அணியை தெரிவுசெய்வதற்காக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் கிரிக்கெட் தொடரொன்று நடத்தப்படலாம். இரு நாடுகளின் எம்.பிக்களுக்கிடையிலான இப்போட்டித்தொடர் எப்போது நடைபெறும் என அறிவிக்கப்படவில்லை. எனினும், அடுத்த வருடம் ஆரம்பத்தில் இடம்பெறலாம் என தெரியவருகின்றது.
