மியன்மாரில் இராணுவ ஆட்சியால் சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகியின் வீட்டை அரசாங்கம், ஏலம் விட்டபோதிலும் அதனை வாங்குவதற்கு எவரும் முன்வராதது, இராணுவ ஆட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகின்றது.
மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக சிறையில் இருந்து போராடியவர் ஆங் சான் சூகி. இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றிருந்தார். இவருடைய தொடர் போராட்டம் காரணமாக அங்கு இராணுவ ஆட்சி கலைக்கப்பட்டது.
இதனையடுத்து 2015 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் ஆங் சான் சூகி வெற்றி பெற்று அந்த நாட்டின் தலைவராக பதவியேற்றார். தொடர்ந்து 2020-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்லில் 81 சதவீத வாக்குகளை பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தார்.
2021-ம் ஆம் ஆண்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின்னர் ஆங் சான் சூகி மீது ஊழல் குற்றச்சாட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிறையில் உள்ள ஆங் சான் சூகியை விடுதலை செய்யக்கோரி அங்கு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
மியன்மாரில் கடுமையான நிதி நெருக்கடி நிலவி வரும்நிலையில் ஆங் சான் சூகிக்கு சொந்தமான சொத்துகளை இராணுவம் விற்று பொருளாதார இழப்பை சரிகட்டி வருகிறது.
இராணுவ நெருக்கடி நிலையின்போது ஆங் சான் சூகி அடைக்கப்பட்டிருந்த வீடு கையகப்படுத்தப்பட்டது. மேலும் அதனை ஏலம் விட இராணுவம் நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஏலம் விடப்பட்ட அந்த வீட்டை யாரும் வாங்க முன்வரவில்லை.
ஏலம் விடும் முயற்சி தோல்வியில் முடிந்தது அந்த நாட்டின் இராணுவத்துக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.