மத்திய கிழக்கில் நிலவிவரும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் வளைகுடா அரபு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் – காஸா இடையேயான போரில், ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அவ்வமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலில் ஈடுபட்டது.
இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது உலக அளவில் பேசுபொருளானது. இதன்காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ”ஈரான் பெரும் தவறை செய்துவிட்டதாகவும், அதற்கான விலையை அந்நாடு கொடுக்க வேண்டி இருக்கும்” என்றும் எச்சரித்துள்ளார்.
அதேநேரத்தில், ”தேவைப்பட்டால் இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்” என்று ஈரான் தலைவர் அலி காமினி தெரிவித்துள்ளார். இதனால், மத்திய கிழக்கு பகுதியில் தொடர்ந்து பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்த நிலையில், வளைகுடா அரபு நாடுகள் மற்றும் அமெரிக்க நட்பு நாடுகளுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பதாகக் கூறப்படும் செய்தியில், ‘வளைகுடா அரபு நாடுகள் தங்களின் வான்வழி மற்றும் ராணுவத் தளங்களை இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பயன்படுத்த அனுமதித்தால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அதற்கான தக்க பதிலடி கொடுக்கப்படும்’ என ஈரான் எச்சரித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்த நடவடிக்கை முழு குழுவும் எடுத்த நடவடிக்கையாக ஈரான் கருதும்’ எனத் தெளிவுப்படுத்தி உள்ளது.
சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜோர்டான் மற்றும் கத்தார் போன்ற எண்ணெய் வளமிக்க நாடுகளுக்கு ரகசிய ராஜதந்திர சேனல்கள் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நாடுகளில் எல்லாம் அமெரிக்கப் படைகள் உள்ள நிலையில், சரியாக அந்த நாடுகளுக்கு மட்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.