‘முறைகேடு’ – சின்மயாமிஷன் முகாமையாளர்மீது இறம்பொடையில் தாக்குதல்!

இறம்பொடை ஆஞ்சநேயர் கோவிலிலுள்ள சின்மயாமிஷன் கிளையின் முகாமையாளர்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் காயமுற்ற அவர் கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முகாமையாளருக்கு எதிராக இந்து அமைப்புகளும், தன்னார்வ நிறுவனங்களும் பல குற்றச்சாட்டுகளை சான்றுகள் சகிதம் முன்வைத்தும், சின்மயாமிஷன் ஆன்மீக நிறுவனத்தின் இலங்கை கிளை எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என பரவலாக விசனம் வெளியிடப்பட்டுவருகின்றது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மேற்படி முகாமையாளரின் ஒழுக்கமற்ற செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட நபரொருவர் நேற்று மாலை (03) அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

மலையக மக்களுக்கு ஆன்மீக சேவையாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட சின்மயாமிஷன் நிறுவனம் ஆரம்பத்தில் சிறப்பாக செயற்பட்டாலும் தற்போது திசைமாறி பயணிப்பதாக இந்து குருமார்கள் அண்மையில் குற்றச்சாட்டியிருந்தனர்.

குறித்த ஸ்தாபனம் வியாபார நிலையமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும், புனித தளத்தை அவமதிக்கும் விதத்தில் முகாமையாளரின் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பில் மலையக இந்து அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும், சின்மயாமிஷன் நிறுவனத்தின் இலங்கைக்கிளை உறுப்பினர்களுக்குமிடையில் ஜுன் 14 ஆம் திகதி நடைபெற்ற சந்திப்பின்போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.  கடும் சொற்போரால் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் கூட்டம் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles