ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும், இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர் ஸ்தானிகர் வினோத் கே ஜேக்கப்புக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று நடைபெற்றது.
இலங்கைக்கு கொவிட் தடுப்பூசிகளை வழங்கியமைக்காக இந்தியாவின் நல்லெண்ணத்தை ரவூப் ஹக்கீம் இதன்போது பாராட்டியுள்ளது. அத்துடன் பொருளாதாரம், நிதி மற்றும் அபிவிருத்தி ஒத்துழைப்பு வாய்ப்புக்கள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
அண்மைய காலப்பகுதியில் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த தனது மதிப்பீட்டினை ரவூப் ஹக்கீம் , பிரதி உயர் ஸ்தானிகரிடம் பகிர்ந்துகொன்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் நடைபெறவிருக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கவனம் செலுத்தப்படவுள்ள விடயங்கள் தொடர்பாகவும் அவர் இங்கு சுட்டிக்காட்டியிருந்தார்.
2019 நவம்பர் முதல் இந்திய மற்றும் இலங்கை தலைவர்கள் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தொடர்பாடல்கள் குறித்தும் பிரதி இந்திய உயர் ஸ்தானிகர் ஜேக்கப் இந்த சந்தர்ப்பத்தில் நினைவூட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இடையில் 2020 செப்டம்பர் நடைபெற்றிருந்த மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது சகல இனக்குழுக்களின் எதிர்பார்ப்புக்களை புரிந்துணரும் நோக்குடன் இலங்கை செயற்படுமென இரு தலைவர்களும் நம்பிக்கை வெளிப்படுத்தியிருந்தனர்.
அத்துடன் மாகாண சபைகள் மற்றும் 13ஆவது திருத்தம் ஆகியவற்றினை முழுமையாக அமுல்படுத்துவதன் ஊடான அர்த்தப்புஷ்டியான பரவலாக்கம் என்பதே இந்தியாவின் நீண்டகால மற்றும் கொள்கை ரீதியிலான நிலைப்பாடு என பிரதி உயர் ஸ்தானிகர் இச்சந்திப்பில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
