” ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விரைவில் தீர்மானமொன்றை எடுப்பாரென நம்புகின்றேன்.” – என்று இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மைத்திரிபால சிறிசேனவுக்கு அடைக்கலம் கொடுத்து அவரை பாதுகாத்து வைத்திருப்பதுதான் நாம் செய்யும் பெரும் தவறு. அதனால் பலர் எம்மீது கோபத்தில் உள்ளனர். எனவே, அவர் தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட வேண்டும். அதனை ஜனாதிபதி செய்வார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால்கூட அது அரசின் இருப்புக்கு சவாலாக அமையாது. மைத்திரிபால சிறிசேன அப்பம் சாப்பிட்டுவிட்டு அந்த பக்கம் தாவிய பிறகு, நாம் புதிய கட்சியொன்றை உருவாக்கினோம். மஹிந்த ராஜபக்சவை பிரதமராக்கினோம். அவரின் சகோதரரை ஜனாதிபதி ஆக்கினோம். எனவே, இனியும் எங்களுக்கு சவால் இல்லை.
மைத்திரிபால சிறிசேன போன்றவர்கள் அரசுக்குள் இருப்பதுதான் எமக்கு சிக்கல். அழுத்தம். எந்நேரத்தில் வேண்டுமானாலும் அவர்கள் ஆப்பு வைக்கலாம். எனவே, எமது தலைவர்கள் முடிவொன்ற எடுக்க வேண்டும்.” – என்றார்.










