” மைத்திரியை கைது செய்ய முற்பட்டால் வீதியில் இறங்குவோம்” – தயாசிறி எச்சரிக்கை

” முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால் வீதியில் இறங்கி அதற்கான பதிலடி கொடுக்கப்படும்.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பொலன்னறுவையில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” எமது கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேனவை இலக்கு வைத்து எல்லா பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகின்றது. பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ளவர்கள்கூட சூழ்ச்சி செய்கின்றனர். நாம் அரசில் அங்கம் வகித்தாலும் அபிவிருத்திகளின்போது ஓரங்கட்டப்படுகின்றோம். வீதி புனரமைப்புக்கான வாய்ப்புகூட வழங்கப்படுவதில்லை.  இது குறித்து கவலையடையவில்லை. அபிவிருத்தியை செய்து மட்டும் அரசியல் நடத்த முடியாது. அரசியல் பலம் என்பதே முக்கியம்.

அதேவேளை, எமது தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி எதிர்காலத்தில் சிறையில் அடைக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியாக, நாம் வீதியில் இறங்கி, அதற்கான பதிலை தேட வேண்டிவரும்.” – என்றார்.

Related Articles

Latest Articles