ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அதிகாரத்தை அவ்வளவு எளிதில் கைப்பற்றிவிடமுடியாது என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, தேர்தலின் பின்னர் மொட்டு கட்சியை, ஜனாதபிதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்துள்ள தமது அணி கைப்பற்றும் என எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதிலளித்த இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு,
“புதிய சக்தியொன்றை கட்டியெழுப்புவதாகக் கூறிவிட்டே கட்சியிலிருந்து சென்றனர், அவ்வளவு எளிதில் மொட்டு கட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாது, நாமும் அரசியலில்தான் இருக்கின்றோம், முடிந்தால் கைப்பற்றி காட்டட்டும், இவ்வாறு சொல்வபர்கள் கடைசியில் மொட்டு கட்சியில் வந்துதான் சரணடைவார்கள்.
கட்சியின் தீர்மானத்துக்கு எதிராக செயற்படும் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும். மனுஷ நாணயக்கார, ஹரின் பெர்ணான்டோ ஆகியோர் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மதிக்கின்றோம். இவர்கள் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. கட்சி கொள்கைகளுக்கு எதிராக செயற்படும் தரப்புகளுக்கு அனைத்து கட்சிகளும் இவ்வாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – என்றார்.










