நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டாலும், தேர்தலுக்குப் பின்னர் மூன்று மாதங்களுக்குள் அவரை ஜனாதிபதியாக்குவதற்கான ‘பிளான் B’ திட்டம் தமது கட்சியிடம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாமல் ராஜபக்சவைச் சிறையில் அடைத்து வைத்திருந்தாலும் நாம் அவரை ஜனாதிபதியாக்குவோம். அதற்கான திட்டம் எம்மிடம் உள்ளது. ஒருவேளை, நாமல் ராஜபக்ச தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டாலும், எம்மிடம் ‘பிளான் B’ திட்டமும் உள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் அல்லது பொதுத் தேர்தல் என எந்தப் பிரதான தேர்தல் நடைபெற்றாலும், அந்தத் தேர்தலுக்குப் பின்னர் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் நாமல் ராஜபக்ச ஜனாதிபதியாவார். இது நிச்சயமாக நடைபெறும். இதனைப் பதிவு செய்து வைத்துக்கொள்ளுங்கள். ‘பிளான் B’ நிச்சயமாகச் செயல்படுத்தப்படும்.
தற்போதைய சவால்மிக்க சூழ்நிலையில், ‘பிளான் B’ திட்டம் தொடர்பான மேலதிக விவரங்களைக் குறிப்பிட விரும்பவில்லை.
பொதுத் தேர்தல் நடைபெற்றால் நாமல் பிரதமராவார்; ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அவர் ஜனாதிபதியாவார். எனவே, மொட்டுக் கட்சியின் ஆதரவாளர்கள் தைரியமாக இருக்க வேண்டும்” என்றார் சாந்த பண்டார.
