” ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மீள் எழுச்சியால் உள்நாட்டு கட்சிகள் மட்டுமல்ல சர்வதேசமும் அஞ்சுகின்றதா என்ற சந்தேகம் எமக்கு ஏற்பட்டுள்ளது. எனவே , சனல் – 4 காணொளி தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது கட்சியும் விடுக்கின்றது” – என்று அக்கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று (11) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” எவ்வித அடிப்படையும் இன்றி சனல் – 4 ஊடாக வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில்தான் எமக்கு இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
2018 உள்ளாட்சி சபைத்தேர்தலின்போது மொட்டு கட்சிக்கு எல்லா பக்கங்களில் இருந்தும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனகூட, வீதிகளில் திரிய வேண்டிவரும் எனக் கூறியிருந்தார். ஆனால் அத்தேர்தலில் மக்களின் அமோக ஆணைகிட்டியது.
உள்ளாட்சிதேர்தல் முடிவு வந்தகையோடு அடுத்த ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலில் எமது கட்சி வெற்றிநடைபோடும் என்பது எமக்கு தெரியும். நிலைமை இப்படி இருக்கையில் எதற்காக வேறுவித நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்? மூளை வளர்ச்சி குன்றியவர்கள்தான் இப்படியான காரணங்களைக்கூற வேண்டும்.
சனல் – 4 காணொளி குறித்துஅரசுக்கு தேவையெனில் சர்வதேச விசாரணை நடத்தலாம். சர்வதேச விசாரணையை நடத்துமாறு எமது கட்சியும் கோரிக்கை விடுக்கின்றது. சனல் – 4வில் போலியான, திரிவுபத்தப்பட்ட தகவல்களே வெளியிடப்பட்டுள்ளன.” – என்றார்.
