‘யானை – சேவல் கூட்டணி’ நுவரெலியா மாநகரசபையை கைப்பற்றும் – உறுப்பினர் நம்பிக்கை

இலங்கை தொழிலாளர் காங்கிரஸூடன் கை கோர்த்து நுவரெலியா மாநகர சபை தேர்தலில் களம் இறங்கியுள்ள ஐக்கிய தேசிய கட்சி இம்முறை அதிகப்படியான வாக்குகளை பெற்று நுவரெலியா மாநகர ஆட்சியை கைப்பற்றும் என சிரேஷ்ட சட்டத்தரணியும், நுவரெலியா மாநகர சபை இ.தொ.கா உறுப்பினருமான சிவன்ஜோதி யோகராஜ் நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் அமரர் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து நுவரெலியா மாநகர சபைக்கு முதல்வர்,பிரதி முதல்வர்கள் என இ.தொ.கா உறுப்பினர்கள் இருந்து வந்துள்ளனர்.

அதேநேரத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இ.தொ. கா உறுப்பினர்கள் நுவரெலியா மாநகர சபையில் இழந்த பிரதி முதல்வர் வாய்ப்பை இம்முறை தேர்தலில் கைப்பற்ற நுவரெலியா மாநகர சபை பிரதேச மக்கள் இ.தொ.காவுக்கு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையும் உள்ளது.

நுவரெலியா மாநகர சபையை தற்போது ஆட்சி செய்யும் ஐ.தே.கவையும், முதல்வரையும் உதறித்தள்ளிவிட்டு சமீபத்தில் மாற்று கட்சிக்கு தாவியவர்கள் இன்று மாநகர சபையை கைப்பற்ற இ.தொ.கா, ஐ.தே.கவுக்கு கரம் கொடுத்துள்ள இச்சந்தர்ப்பத்தில் (விலகிச் சென்றவர்கள்) இப்போது ஐ.தே.கவுக்கு பலம் சேர்க்க இணைந்து செயற்பட வருகை தந்துள்ளனர்.

அந்தவகையில் இது இ.தொ.காவின் சக்திக்கும், அமைச்சரும்,பொது செயலாளருமான ஜீவன் தொண்டமானுக்கும் கிடைத்த முதல் வெற்றியாகும் எனவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மிக நீண்ட வருடங்களுக்கு பின் இப்போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் களம் இறங்கியுள்ளது. ஆகையால் வெற்றி நிச்சயம் எனவும் மேலும் இவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Latest Articles