யாழ். மாவட்டத்தில் மருதங்கேணி மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களைத்தவிர ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ,கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது டெங்கு நோயின் பரம்பல் தீவிரமாக காணப்படுகின்றது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 70 தொடக்கம் 100 நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகின்றார்கள்.
கடந்த டிசம்பர் மாதத்தில் யாழ்ப்பாணம், நல்லூர் கோப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலே டெங்கு நோயின் பரம்பல் தீவிரமாக காணப்பட்டது.
தற்பொழுது யாழ்ப்பாண மாவட்டத்திலே மருதங்கேணி நெடுந்தீவு தவிர்ந்த ஏனைய 13 பிரதேச செயலர் பிரிவுகளிலும் டெங்கு நோயின் பரம்பல் அதிகரித்து செல்வதை நாங்கள் அவதானிக்க முடிகிறது.
கடந்த வருடத்திலேயே யாழ் மாவட்டத்திலே 3 ஆயிரத்து 986 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர். இந்த வருடத்தில் முதல் மூன்று நாட்களில் 282 டெங்கு நோயாளர்கள் இனங் காணப்பட்டுள்ளார்கள். ” – என்றார்.
