யாழ். பலாலி விமான நிலையத்தை விஸ்தரிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விரிவாக்கத்துக்கான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் அடிப்படை கட்டுமானங்கள் மற்றும் வசதிகளை துரிதமாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர், முதல்கட்டத்தில் இந்தப் பணிகளை முழுமைப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கத்தை முன்னெடுப்பதற்கு 114 ஹெக்டேயர் நிலப் பரப்பு சுவீகரிக்கப்பட வேண்டியுள்ளதாகவும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடலை நோக்கியதாக அந்த விஸ்தரிப்பு அமையும் எனவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னதாக 1986ஆம் ஆண்டு பலாலி விமான நிலையத்துக்காக பெற்றுக் கொள்ளப்பட்ட காணிகளுக்கு இன்னமும் இழப்பீடு வழங்கப்படவில்லை என இதன்போது ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பெறுமதிக்கு ஏற்ப அவர்களுக்கு இழப்பீடு முதல்கட்டமாக வழங்கிய பின்னரே தற்போது தேவைப்படும் மேலதிக காணிகளுக்காக சுவீகரிப்பை ஆரம்பிக்கலாம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் விமான நிலையத்தின் விரிவாக்கத்தின்போது இந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகளவில் கிடைக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகளுக்கான நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles