யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பு நடவடிக்கை எனக்கூறி வெள்ளவத்தை பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் நுழைந்து 6 லட்சம் ரூபா பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரான்சிஸ் வீதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனமொன்றுக்குள் நேற்று முன்தினம் இரவு நால்வர் அத்துமீறி நுழைந்துள்ளனர். தாங்கள் பொலிஸ் அதிகாரிகள் எனவும், யுக்திய நடவடிக்கைக்காக வருகை தந்துள்ளதாகவும் தெரிவித்து, பொலிஸ் அடையாள
அட்டையொன்றையும் காண்பித்துள்ளனர்.
பின்னர் குறித்த நால்வரும் நிறுவன ஊழியர்களை, கூரிய ஆயுதங்களைக் காண்பித்து அச்சுறுத்தி, 6 லட்சம் ரூபா பணத்தையும், தொலைபேசியொன்றையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வெள்ளவத்தை பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளனர். தொலைபேசியும் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ் அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
நால்வரும் கடற்படையை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.










