ரணிலுக்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம் அரச துறை பலப்படுத்தப்பட்டது

நாட்டின் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பை வழங்கியிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜீர அபேவர்தன, அது தேர்தலை இலக்கு வைத்த செயற்பாடு அல்லவென்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அதிகாரம் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரச துறையைப் பலப்படுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

2024 ஜனாதிபதி தேர்தல் சாதி, மதம் சார்ந்த தலைவர் ஒருவரைத் தெரிவு செய்வதாக அன்றி உலகின் வலுவான தலைவர் ஒருவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் என்பதால் நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உறுமய – அஸ்வெசும போன்ற திட்டங்கள் நாட்டின் பொருளாதார திட்டங்களுக்காகவே செயற்படுத்தப்படுவதாகவும், மாறாக அரசியல் வாதிகள் கூறவதைப் போன்று தேர்தல் நோக்கத்திற்காக செயற்படுத்தப்படும் திட்டங்கள் அல்லவெனவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தேர்தல் பிரசார அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாரளர் பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வஜீர அபேவர்தன.

” நாட்டில் 15 இலட்சம் அரச ஊழியர்களும் 5 இலட்சம் ஓய்வூதியதாரிகளும் 65 இலட்சம் சேமலாப நிதியை பெறுவோரும் உள்ளனர். இவர்களே நாட்டின் பொருளாதார வேகத்தை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இம்முறை ஒரு கோடியே 70 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் நடப்பதால் நாட்டின் பொருளாதார வேகத்தை மட்டுப்படுத்த முடியாது. கடந்த காலத்தில் அரச ஊழியர்கள் உள்ளடங்களாக நாட்டின் அனைத்து பிரஜைகளும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தனர். 2001 ஆம் ஆண்டிலும் அப்போதைய அரசாங்கம் நெருக்கடிக்கு முகம்கொடுத்த போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே அன்றும் நாட்டை பொறுப்பெடுத்தார்.

ஆனால் அப்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பொருளாதார வேலைத்த்திட்டத்தை மக்கள் ஏற்கவில்லை. அதனால் இனவாதமும் மதவாதமும் நாட்டுக்கு பரவ ஆரம்பித்தது. நாடு வேறு திசையை நோக்கி நகர்ந்தது.

எவ்வாறாயினும், தற்போது சரிவடைந்த நாட்டை மீட்க கடன் செலுத்துவதற்கான முறைமைகளை உருவாக்க வேண்டும். 2022 மே மாதம் 12 ஆம் திகதி பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டதன் பின்பும் ரணில் விக்ரமசிங்க தனியொரு எம்.பியாக தன்னால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்றும் ஒத்துழைப்பு கிடைத்தால் நாட்டை மீட்பதாகவும் கூறினார். அவர் அதற்காக சுமார் நூறு சட்டங்கள் வரை நிறைவேற்றினார். வேறுபாடுகள் வேண்டாம் நாட்டுக்காக ஒற்றுமையாக பயணிப்போம் என்று அறிவித்தார்.

கடனை முகாமைத்துவம் செய்ய நாட்டில் கடன் முகாமைத்துவச் சட்டத்தையும், செலவு கட்டுப்பாட்டிற்கான சட்டத்தையும், நிறைவேற்றினார்.

மேலும் அவர் பல சட்டங்களை நிறைவேற்வுள்ளார். அவற்றுள் பொருளாதார மாற்றச் சட்டம் சிறப்பு வாய்ந்தது. இனிமேல் நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லாத வகையில் நிர்வகிப்பதற்கான விடயங்கள் அதற்குள் காணப்படுகிறன. அதன்படி நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5% ஆக பேணப்பட வேண்டும்.

2027 ஆம் ஆண்டுக்குள் 5% பொருளாதார வளர்ச்சி வீதத்தை அடைவதற்குத் தேவையான பொருளாதார நுட்பங்களை இந்தச் சட்டம் கொண்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, ஜெயிக்கா, இந்தியா, சீனா ஆகிய தரப்புக்களுக்கு நமது கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான திட்டத்தை செயற்படுத்தும் வகையில் இந்த பொருளாதார மாற்றச் சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

2002 இலும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச நிர்வாக பொறிமுறையில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்க்கிறார். அந்த மாற்றத்திற்கு தேவையான நிதியுதவியை வழங்குவதாக உலக வங்கி உறுதியளித்தது. ஆனால் இந்த செயற்பாடுகளை தொடர்வதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கவில்லை.

எனினும், மீண்டும் அரச சேவையைப் பலப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனம் செலுத்தியுள்ளார். அதன் கீழ், புதிய உலகப் போக்குகளுடன் அரசாங்கப் பொறிமுறையை மாற்றியமைப்பதற்கான, பொதுக் கொள்கை மற்றும் பொது முகாமைத்துவ பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தை 55,000 ஆக உயர்த்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போதும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.

வாக்குகளுக்காகவே அரச சேவையில் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சில கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் மற்றுமொரு நடவடிக்கையாக நாட்டின் அபிவிருத்திக்கு உந்து சக்தியாக விளங்கும் அரச சேவையினரின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதே உண்மையாகும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யதார்த்தமான முறையில் சம்பளத்தை அதிகரித்துள்ளார். அதனுடன், மற்ற வேட்பாளர்களும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் அந்த வாக்குறுதிகளை அவர்களால் நிறைவேற்ற முடியுமா என்பது கேள்விக்குரியாகும்.” என்று தெரிவித்தார்.

Related Articles

Latest Articles