ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோர் ஒன்றிணைந்த பின்னர் தமிழ், முஸ்லிம் கட்சிகளும் அந்த அணியில் இணையும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்பவற்றை ஒன்றிணைப்பது தொடர்பில் முன்னெடுக்கப்படும் முயற்சி தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ரவி கருணாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,
“ ரணில் விக்கிரமசிங்க பதவி விலகுகின்றாரா, நாடாளுமன்றம் வருவாரா என்பது முக்கியம் அல்ல. அவரும், சஜித்தும் இணைந்து செயல்பட வேண்டியதுதான் முக்கியம்.
அந்த ஒன்றிணைவுக்காகவே நானும் செயல்பட்டுவருகின்றேன். எனினும், அதனை நான் வெளிக்காட்டிக்கொள்ளவில்லை.
அதேபோல சிறு கட்சிகளையும் இணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளேன்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன இணைந்த பின்னர் ஏனைய சிறு கட்சிகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.
தமிழ், முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் இணையும். அதற்கான சிறப்பான ஆரம்பம் கொழும்பில் வழங்கப்பட்டுள்ளது.” – என்றார் ரவி கருணாநாயக்க.
