சம்பள உயர்வு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளமையானது தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு இழைத்துள்ள பெரும் துரோகமாகும் என்று தொழிலாளர் தோசிய சங்கத்தின் தேசிய சபை உறுப்பினர் பெரியசாமி செந்தில்குமார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
“தோட்டத் தொழிலாளர்களின் வேதன விடயத்தில் அரசும் அரசோடு இணைந்துள்ள மலையக தொழிற்சங்கங்களும் தோட்ட கம்பனிகளோடு இணைந்து தொழிலாளர்களை ஏமாற்றும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளமை கவலையளிக்கின்றது.
இவ்விடயத்தில் அரசு இரண்டு வர்த்தமானிகளை வெளியிட்டும் அதனை நடைமுறைப்படுத்த முடியாமல் போனமை கம்பனிகளுடனான இரகசிய உறவை வெளிக்காட்டுகின்றது.
தற்போது இவ்விடயம் தொடர்பான வழக்கு விசாரனையில் இருக்கும் நிலையில் அரசும், மலையக அமைச்சர்களும் கம்பனிகளோடு சோர்ந்து 1700 ம் குறைவான தொகையினை வழங்க இரகசிய பேச்சுக்களில் இரங்கியுள்ளமை தெளிவாகின்றது.
மலையக மக்களின் வேதனப்பிரச்சனை, காணிப்பிரச்சனை , வீட்டுப்பிரச்சனை கல்வி, சுகாதாரம் என அனைத்திலும் இரட்டை வேசம் போடும் தற்போதைய அரசுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மலையக மக்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும்.” – எனவும் அவர் கூறினார்.