ரூ. 50 ஆயிரம் மதிப்பிடப்பட்ட பறவை ரூ. 15 லட்சத்துக்கு கொள்வனவு – கோபா குழுவில் அம்பலம்

2018 முதல் 2020 வரை வெளிநாட்டுப் பறவைகளை கொள்வனவு செய்யும் போது ஒரு சில பறவைகளுக்கு மதிப்பிடப்பட்ட தொகை 50, 000 ரூபவாக இருந்த போதிலும், சுமார் 1.5 மில்லியன் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் இடம்பெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா) புலப்பட்டது.

அதற்கமைய மதிப்பிடப்பட்ட தொகையை விட, கொள்வனவு செய்யப்பட விலை 3000% வீதம் அதிகளவானது எனத் தெரியவந்தது.

இந்தக் கொள்வனவில், விநியோகஸ்தரினால் 32 வகையான பறவைகளை விநியோகிக்க வேண்டும் என்ற நிபந்தனை காரணமாக அதிக விலையில் பறவைகளைக் கொள்வனவு செய்யவேண்டி ஏற்பட்டதால் சுமார் 17 மில்லியன் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தற்போதைய செயலாற்றுகை தொடர்பில் விசாரணை செய்வதற்கு இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தலைமையில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா) 2023.07.05 ஆம் திகதி கூடிய போது இந்த விடயங்கள் புலப்பட்டன.

இந்தக் கொள்வனவில் மதிப்பிடப்பட்ட விலைக்கும் உண்மை விலைக்கும் இடையில் இவ்வளவு பாரிய வித்தியாசம் இருப்பது சிக்கலுக்குரியது என்று குழு வலியுறுத்தியது. சம்பந்தப்பட்ட துறை மற்றும் சந்தை பற்றிய புரிதல் இந்தத் திணைக்களத்திடம் இருப்பதால் மதிப்பிடப்பட்ட தொகைக்கும் உண்மையான செலவுக்கும் இடையில் இவ்வளவு அதிகமான பெறுமதி காணப்படுவது குறித்து குழு நீண்ட நேரம் வினவியது. அதனால் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்குமாறும், சரியான மதிப்பீடு மதிப்பீட்டின் அவசியத்தை வலியுறுத்தி எதிர்காலத்தில் உள்ளக சுற்றுநிருபமொன்றை வெளியிடுமாறும் கோபா குழுவின் தலைவர் வலியுறுத்தினார்.

புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்ட மிருகக்காட்சிசாலைகள் உள்ளிட்ட விடயங்கள் விரைவாக சட்டத்துக்குள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதால் சட்டத்தை விரைவாகத் திருத்துவதன் அவசியத்தையும் குழு வலியுறுத்தியது. அதற்கமைய சட்டவரைஞர் திணைக்களத்தின் ஒருங்கிணைப்பில் அடுத்த ஒரு மாதத்தில் அந்த நடவடிக்கையை நிறைவு செய்யுமாறும், இது தொடர்பான அறிக்கையை 2023 ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறும் கோபா குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் வருமானத்தி சரியான முறையில் வகைப்படுத்தும் அவசியம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய நுழைவுச்சீட்டுக்கள் மற்றும் ஏனைய செயற்பாடுகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை வேறு வேறாக முன்வைக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் ஆலோசனை வழங்கினார்.

தற்பொழுது அருகிவரும் அவதானத்துக்குட்பட்டுள்ள விலங்குகளை பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்று இல்லை என கண்காணிக்கப்பட்டுள்ளதால் வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு, வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் என்பன ஒன்றிணைந்து குழுவொன்றை நியமித்து வேலைத்திட்டமொன்றை தயாரிக்குமாறு குழுவின் தலைவர் அறிவித்தார்.

IUCN சிவப்புத் தரவுப் புத்தகத்துக்கு அமையக் குறிப்பிடப்பட்டுள்ள இந்நாட்டில் அருகிவரும் அவதானத்துக்குட்பட்டுள்ள விலங்குகள் தொடர்பான தகவல்களை தொடர்ந்து இற்றைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கமைய, இது தொடர்பில் விரிவான தேசியக் கணக்கெடுப்பொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

பின்னவலை யானைகள் சரணாலயம், பின்னவலை வாகொல்ல மிருகக்காட்சிசாலை மற்றும் ரிதியகம சபாரி பூங்கா என்பவற்றின் சிக்கல்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. ரிதியகம சபாரி பூங்காவில் உள்ள 900 விலங்குகளில் 485 விலங்குகளின் பால்நிலை தொடர்பில் இனங்காணப்படாமை பற்றி இதன்போது வினவப்பட்டது. இனத்தால் விலங்குகளில் 300க்கும் அதிகமானவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட நட்சத்திர ஆமைகள் எனவும் சட்ட நடவடிக்கை நிறைவடையும் வரை பூங்காவின் பொறுப்பில் உள்ளமை இதன்போது புலப்பட்டது. அத்துடன், இந்த சபாரி பூங்காவில் கால்நடை மருத்துவர் ஒருவர் மாத்திரம் உள்ளதால் விரைவாக வெற்றிடங்களை நிரப்புமாறு குழுவின் தலைவர் ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், நிறுவனத்தின் முறையான மூலோபாயத் திட்டம் இல்லை என்பதால் 2024 – 2030 ஆண்டுக்கு புதிய திட்டமொன்றை தயாரித்து இவ்வாண்டு டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் அந்த நடவடிக்கைகளை நிறைவு செய்யுமாறும் ஆலோசனை வழங்கப்பட்டது.

Related Articles

Latest Articles