2022ஆம் நிதியாண்டுக்காக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு – செலவு திட்டம் ஒரு புஷ்வாணத்தைப் போன்றது என்பதுடன் இதில் மலையக மக்களுக்கு அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் எவ்வித ஆக்கபூர்வமான அறிவிப்புக்களும் இடம்பெறவில்லையென்பது வேதனையளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆண்டுக்கான அரசின் வரவு – செலவு திட்டத்தில் அரசாங்க செலவீனம் 3 ஆயிரத்து 912 பில்லியன் ரூபா என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் அரச வருமானம் 2 ஆயிரத்து 284 பில்லியன் ரூபாவாக இருக்குமென கூறப்பட்டுளள்து. வரவு – செலவு திட்ட பற்றாக்குறை என்பது இமாலய தொகையாக உள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடியான சூழல் அரசாங்கம் மேலும் மேலும் கடன்களை பெரும் விதத்திலேயே வரவு – செலவு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்க்கை செலவும் பாரிய அளவில் அதிகரிக்கும்.
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மக்களால் தாங்கிக்கொள்ள முடியாத அளவு உயர்வடைந்துள்ளன. இதனை கட்டுப்படுத்த அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுடன் வரவு – செலவு திட்டதிலும் எவ்வித அறிவிப்புகளும் இல்லை.
மலையகத்தில் லயன்களை இல்லாதொழிப்பதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மிகக்குறைந்த நிதியே என்பதுடன், இத்தொகையை கொண்டு 400 வீடுகளை கூட கட்டமுடியாது. ஒதுக்கிய இந்நிதியைக் கூட இவர்கள் மலையகத்திற்கு செலவிடுவார்களா என்ற சந்தேகம் எமக்கு உள்ளது. நாட்டு மக்கள் முகங்கொடுத்துள்ள இந்த நெருக்கடியான சூழலில் மக்களின் வாழ்க்கை செலவை குறைக்கவே அரசாங்கம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
