நுவரெலியா மாவட்டத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங், மடகொம்பரை தோட்டத்துக்கு நேற்று சென்றிருந்தார். மலையக அரசியல் அரங்கம் பிரதிநிதிகளுடனும் அவர் பேச்சு நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பில் தமது முகநூல் பக்கத்தில் கீழ்வருமாறு பதிவிட்டுள்ளார் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திலகர். 
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், எமது அழைப்பை ஏற்று மடகொம்பரை மண்ணுக்கு வருகை தந்த தருணத்தில் …
– 150 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட லைன் அறைகளை அதே தரத்திலும்
– மக்கள் தமது முயற்சியால் தரமுயர்த்தி வாழும் லைன் அறைகளையும்
– ஏழு பேர்ச் காணியில் தனி வீடுகளில் வாழ்வதையும் எடுத்துக் காட்டினோம்.
– 1947 முதல் 2020 வரை ஐந்து எம்பிக்களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய மண் என்பதை எடுத்துச் சொன்னோம்.
– கல்வியாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் என பலரும் உருவான மண் என சாட்சி சொன்னோம்.
-எங்களால் முடியும்! எங்களுக்கு காணி உரிமை மறுக்கப்படுவதாலும், பொது நிர்வாகத்தில் சமவாய்ப்பு வழங்கப்படாததாலும் இவ்வாறு வைக்கப்பட்டுள்ளோம் என்பதை சுட்டிக் காட்டினோம்.
– அரசாலும், அரசாங்கத்தாலும் வழங்கப்படும் அபிவிருத்திகள் மட்டுமல்ல, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் முழுமையான அபிவிருத்தியை மக்கள் கண்டடையவில்லை என்பதை சுட்டிக் காட்டினோம்.
Leave No One Behind என்பதற்கு அமைய எங்களையும் சர்வதேச அபிவிருத்தி பாதையில் அரவணைத்துச் செல்ல ஐ. நா தீர்மானங்களில் அமெரிக்கா தனது பங்களிப்பை வழங்க வேண்டும் என வலியுறுத்தினோம்.
முதல் 100 வருடகால அடிமை வாழ்வை முறியடித்து அடுத்த 100 ஆண்டுக்காலத்தில் அரசியல் சமூகமாக எழுந்த வரலாறு கடினமான பக்கங்களைக் கொண்டது. மூன்றாவது 100 இல் மேலும் முன்னேறுவதே எமது இலக்கு என்றோம்.
