“ ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையமாகக் கொண்டு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவோம்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மட்டக்களப்பு மாவட்டம் உள்ளடங்களாக கிழக்கு மாகாணத்தின் பங்களிப்பு குறித்து ஆராய்ந்த போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பங்களிப்பு மிகக்குறைவான மட்டத்திலயே அமைந்து காணப்படுகின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீத பங்களிப்பை வழங்கி வருகிறது.
மீதமுள்ள 58 வீத பங்களிப்பை ஏனைய 8 மாகாணங்களும் வழங்கி வருகின்றன. கிழக்கு மாகாணம் 5 வீதத்துக்கும் குறைவான பங்களிப்பையே வழங்கி வருகிறது.
உலகில் பல நாடுகள் யுத்தம் முடிவடைந்து சர்வதேச நன்கொடையாளர் மாநாடுகளை நடத்திய போதிலும், எமது நாட்டில் யுத்தம் முடிவடைந்து இன்வரையில் 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், அன்று தொடக்கம் இன்றுவரையுள்ள எந்தத் தலைவராலும் சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டைக் கூட்ட முடியவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களையும் மையப்படுத்தி நாடு தழுவி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நாம் நடத்துவோம்.
போருக்குப் பின்னரான காலப்பகுதியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையர்களாக நாம் இந்நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும். பிரிவினையை தொடர்ந்தால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை. மத அடிப்படையில் இனங்கள் ஒன்றிணைய வேண்டும். இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் மூலம் இன, மத, சாதி, வர்க்க, கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.
இவை அனைத்தும் வாய்மொழியாகச் சொல்லப்படுவது போலவே செயல்படுத்துவேன். ரணசிங்க பிரேமதாச ஜனாதிபதியின் புதல்வர் என்ற வகையில் வடக்கு, கிழக்கு இரண்டு மாகாணங்களை மையப்படுத்தி சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடாத்தி, மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒவ்வொரு பிரிவிலும் கிராமங்களிலும் அபிவிருத்தி அலகுகளை நிறுவுவேன்.” – என்றார்.