வடக்கில் 70 இற்கு மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படலாம்!

கல்வி பின்புலம் என்பது யாழ்பாணத்துக்கு தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாகும். தனித்துவமான காலச்சாரத்தை கொண்ட விடயமாக இருந்த போதும் இன்று கல்வி பாரிய சவாலுக்கு உட்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கல்விச்சீர்திருத்தம் தொடர்பான தேசிய வேலைத்திட்டத்தின் எட்டாவது அமர்வு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்று (08.08.2025) சனிக்கிழமை வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், வட மாகாண சபையின் பிரதம செயலாளர் திருமதி. தனுஜா, நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவேவா, கல்வி அமைச்சின் பிரதிநிதித்துவ அதிகாரிகள், வடக்கு மாகாண கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி சீர்திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கல்வி மறுசீரமைப்பு ஏன் தேவை என்பது தொடர்பில் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

அதில் கல்வியின் நிலைமை, பாடசாலையின் நிலைமை, அவற்றின் மூலம் ஏற்படவுள்ள மாற்றம் என்ன என்பது தொடர்பாகவும் குறிப்பிட்டு கல்வி சீர்திருத்தம் முக்கிய தேவையனெ தெளிவாக வலியுறுத்தியிருந்தார்.

அதுபோலவே எமது அரசாங்கத்தின் நோக்கமும் அதுவாகவே இருக்கிறது. கிளின் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம், வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம், நாட்டை டிஜிட்டல் மயமாக்கல் போன்ற பிரதான வேலைத்திட்டங்களை கொண்டுள்ளது.

அதில் வறுமை ஒழிப்பு தொடர்பான வேலைத்திட்டத்துக்கு கூடுதலான முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு மாகாணம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் ஆளுநர் மற்றும் உலக வங்கி பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வட மாகாணத்தை விசேடமாக கவனத்தில் கொண்டனர். வட மாகாணமே இலங்கையில் அதிக வறுமைக்கு உட்பட்ட பிரதேசமாக இருக்கிறது.

இலங்கையில் வறுமையான மாவட்டமாக மொனராகலை மாவட்டம் இருந்த நிலையில் தற்போது அது முல்லைத்தீவு மாவட்டமாக மாறியிருக்கிறது.

இதனால் வறுமையுடன் இணைத்து கல்வி தொடர்பான பிரச்சினையையும் அணுக வேண்டியுள்ளது. வறுமையிருக்கும் இடங்களிலெல்லாம் கல்வி பிரச்சினையும் காணப்படுகிறது. கல்வியில் பின்னடைவை சந்தித்துள்ள இடங்களில் வறுமை அதிகரித்துள்ளது.
மேலும் சமூக சீரழிவுகள், குற்றசெயல்கள் அதிகரித்து காணப்படுகிறது. இன்று யாழ் மாவட்டத்திலும் இந்த சவால்கள் காணப்படுகிறது. இந்த சவால்களில் இருந்து மீண்டு புதிய யாழ்ப்பாணத்தை கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் இருக்கிறது.

இதனால் எமது அரசாங்கத்தில் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்ற கொள்கை பின்பற்றப்படுகின்றது. இதற்கமைவாகவே கல்வி புலத்தை வெளிப்படுத்தி கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கு கல்வி அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

 

இதேவேளை வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

 

10 பிள்ளைகள் கல்வி கற்கும் 35 பாடசாலைகள் காணப்படுவதாகவும் 11 – 20 பிள்ளைகள் கல்வி கற்கும் 64 பாடசாலைகளும் 20 – 50 பிள்ளைகள் கற்கும்; 171 பாடசாலைகள் இருப்பதாகவும் 50 – 100 பிள்ளைகள் கற்கும் 174 பாடசாலைகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

இதில் 40 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் எவ்வித கல்வி நடவடிக்கைகளும் முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் எமது கல்வியில் மறுசீரமைப்பு தேவை என்பது உணரப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் புரிதலுடன் செயற்பட்டால் சமூகத்துக்கு நல்ல செய்தியை கொண்டு செல்லமுடியுமென எதிர்பார்க்கிறேன் எனவும் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles