தங்க செயின், வளையலை திருடி தென்னை மரத்தில் உள்ள கூட்டிற்குள் காகம் வைத்திருந்த வினோத சம்பவமொன்று இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கண்ணன்கடவு பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மனைவி ஷரீபா. இந்த தம்பதிக்கு பாத்திமா ஹைபா என்ற மகள் உள்ளார். அவர் தரம் ஒன்றில் கல்வி கற்கின்றார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஷரீபாவின் உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில் ஷரீபா தன் மகள் பாத்திமாவுடன் பங்கேற்றுள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றபோது மகள் பாத்திமாவுக்கு தங்க செயின் மற்றும் 2 தங்க வளையல்களை அணிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு இருவரும் வீடு திரும்பிய நிலையில் தங்க செயின் மற்றும் வளையல்களை சிறுமி கழற்றி பேப்பரில் சுற்றி ஒரு கூடைப்பையில் வைத்துள்ளதாகவும் அதை பத்திரமாக எடுத்துவைக்கும்படியும் சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகள் கூறியதை தாயார் ஷரீபா மறந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஷரீபா தனது மகளுடன் உறவினர் வீட்டிற்கு செல்ல புறப்பட்டுள்ளார். அப்போது, மகள் கூறிய இடத்தில் நகைகள் இல்லை. பேப்பரில் மடித்துவைக்கப்பட்டிருந்த நகைகள் காணாததால் ஷரீபா அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, உறவினர்களுடன் சேர்ந்து வீடு முழுவதும் நகைகளை தேடியுள்ளார். அப்போது, வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தின் அடியில் குப்பைகளுக்கு நடுவே தங்க செயின் கிடந்துள்ளது. இதனால், ஆனந்தமடைந்த குடும்பத்தினர் தொடர்ந்து தென்னைமரத்தை சுற்றி தேடியுள்ளனர்.
அப்போது, தென்னை மரத்தில் கூடு கட்டியுள்ள காகம் பிளாஸ்டிக் வளையல், சிறு குச்சிகளை எடுத்துச்செல்வதை உறவினர் சுலிஹா, பக்கத்துவீட்டுக்காரர் சாந்தா ஆகியோர் கவனித்துள்ளனர்.
இதனால், சந்தேகமடைந்த ஷரீபா தனது உறவினர் அகமது கோயாவை தென்னை மரத்தில் ஏறி காகத்தின் கூட்டில் சோதனை செய்யும்படி கூறியுள்ளார். இதையடுத்து, அகமது தென்னை மரத்தில் ஏறியுள்ளார். அங்கு அவருக்கு ஆச்சரியம் காத்திருந்தது. சிறுமியின் தங்க வளையல் காகத்தின் கூட்டிற்குள் இருந்துள்ளது.
இதையடுத்து, தங்க வளையலை அகமது கைப்பற்றி மரத்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர், வளையலை ஷரீபாவிடம் ஒப்படைத்தார்.
நன்றி – தினத்தந்தி