இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை முன்னேற்றும் நோக்கில் மீண்டும் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மத்திய வங்கி அண்மையில் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதத்தை 2 வீதத்தால் குறைக்க தீர்மானித்துள்ளது.
அதன்படி, வழமையான வைப்புத்தொகை வீதம் 11 சதவீதமாகவும், வழக்கமான கடன் வசதி வீதம் 12 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.இலங்கை மத்திய வங்கி தொடர்ச்சியாக கொள்கை வட்டி வீதத்தை குறைப்பது இது இரண்டாவது தடவையாகும்.
பணவீக்கம் மற்றும் வெளியீட்டு இடைவெளி ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்காலத்தில் மேலும் வட்டி விகிதக் குறைப்புக்கள் அவசியமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். இதுவரை எடுக்கப்பட்ட முடிவுகள் சரியானவை என்பதையே இது காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்தக் கடன் 83 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனவும் அதில் 41.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுக் கடன் எனவும் மீதி 42.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உள்நாட்டுக் கடன் எனவும் காட்டப்பட்டுள்ளது.
வட்டி விகிதக் குறைப்பு இந்த வருடத்தின் கடைசி 6 மாதங்களில் இலங்கையை மீட்பதற்கான சாதகமான பாதையில் பிரவேசிப்பதற்கு ஏதோ ஒரு வகையில் உதவும் என நம்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்காலத்தில் மேலும் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான பரிந்துரைகளை இலங்கை மத்திய வங்கி முன்வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.










