வனிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை

இலங்கை இருபதுக்கு 20 கிரிக்கெட் அணித் தலைவர் வனிந்து ஹசரங்கவிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டித்தடை விதித்துள்ளது.

பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளின் போது கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறியமைக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடுவர் வழங்கிய தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்ததன் ஊடாக வனிந்து ஹசரங்க ஒழுக்கத்தை மீறியுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் 2 போட்டிகளுக்கும் அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 வருடங்களின் பின்னர் வனிந்து ஹசரங்க மீண்டும் டெஸ்ட் குழாத்தில் பெயரிடப்பட்டிருந்தார்.

இதேவேளை, வனிந்து ஹசரங்கவிற்கு போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 தண்டனை புள்ளிகளும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த 24 மாதங்களில் வனிந்துவிற்கு 8 தண்டனைப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி நிறைவில் நடுவர்களுக்கு கைலாகு கொடுக்கும்போது சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒழுக்கவிதிகளை மீறும் வகையில் செயற்பட்டதை ஏற்றுக்கொண்ட இலங்கை அணித் தலைவர் குசல் மென்டிஸுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவருக்கும் போட்டிக் கட்டணத்தில் 50 வீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன் 3 தண்டனை புள்ளிகளும் வழங்கப்பட்டதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

Related Articles

Latest Articles