வலி சுமந்த பயணம் – எப்போது வழி பிறக்கும்?

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட தோத்தலா தோட்டம், மஸ்கெலிய நகரில் இருந்து சுமார் ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. சுமார் 350 குடும்பங்கள் வாழும் இத்தோட்டத்தில்  70 குடும்பங்களின் உறுப்பினர்களே தோட்டத்தில் தொழில் செய்துவருகின்றனர்.

மேற்படி தோட்டத்திலிருந்து பாடசாலை மாணவர்கள் முதல் கர்ப்பிணி தாய்மார்கள் வரை தமது அனைத்து தேவைகளுக்கும் மஸ்கெலிய நகருக்கே செல்லவேண்டியுள்ளது. அவ்வாறு செல்வதாயின் கால்நடையாகவோ வாடகை வாகனங்கள் மூலமாகவோ செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது.

எனினும், மஸ்கெலியா நகருக்கு செல்வதற்கான பாதை சீரின்மையால் வாடகை வாகனங்களுக்கும் கூடுதலான பணம் அறவிடபடுவதாகவும் குறித்த நேரத்தில் தமது பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் பாடசாலை பிள்ளைகள் தினமும் கரடு முரடான சேற்று பாதையை கடந்தே பாடசாலைக்கு செல்லவேண்டியுள்ளதாகவும்  மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

” பாதை சீரின்மையால் எனது முச்சக்கர வண்டி விரைவில் பழுதடைந்துவிடுகின்றது. கூடுதலான எரிபொருள் செலவாகின்றது. தேர்தல் நேரத்தில் மட்டும் எங்கள் தோட்டப்பாதையை சீர் செய்து தருவதாக மலையக தலைவர்களால் வாக்குறுதி வழங்கியிருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு வாக்குறுதிகளை மறந்துவிடுகிறார்கள். புதிய அரசாங்கத்தின் மூலமாக எமக்கு தீர்வு கிடைக்க வழி செய்ய வேண்டும்.” – என்று ஆட்டோ சாரதி ஒருவர் குறிப்பிட்டார்.

” இங்கிருந்து புளூம்பீல்ட் பாடசாலைக்கே 35 பேர் செல்கின்றோம் சுமார் 3 கி .மீ தூரம் வரை நடந்தே செல்ல வேண்டும். பாதை சீரின்மையால் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நடந்து செல்ல வேண்டும். மழை காலங்களில் உடைகள் , சப்பாத்து எல்லாம் சேற்று நீரால் அழுக்காகிவிடுகிறது . எனவே இந்த பாதையை சீர் செய்து தருமாறு கேட்கின்றோம்.” – என பாடசாலை மாணவர்கள் கருத்து வெளியிட்டனர்.

Related Articles

Latest Articles