கண்டி மாவட்டம், புசல்லாவை, பாரதெக்க – செல்வகந்த கீழ்பிரிவுக்கு செல்வதற்கான பாதையில் உள்ள பாலம் சேதமடைந்து உடைந்து விழும் அபாயத்தில் உள்ளது.
இப்பகுதியில் சுமார் 70 குடும்பங்கள் வாழ்கின்றன. தற்போது கடும் மழை பெய்துவருவதால் மக்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அச்சத்துடனேயே பாலத்தை கடக்கவேண்டியுள்ளது.
இப்பாலத்தையும், வீதியையும் புனரமைத்துதருமாறு அரசியல் வாதிகளிடம் மக்கள் பல தடவைகள் கோரிக்கை விடுத்தும், மனுக்களை சமர்ப்பித்தும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.
எனவே, மலையகத்தில் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு உதவும் தன்னார்வு தொண்டு நிறுவனங்களாவது தமது கோரிக்கையை நிறைவேற்ற முன்வந்தால் அது பெரும் உதவியாக அமையும் என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
பாலம் சேதமடைந்தும், வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வாகனங்கள்கூட அப்பகுதிக்கு வருவதில்லை. பிரதான வீதிக்கு நடந்துவருவதாக இருந்தால்கூட கடும் போராட்டம்தான். பாடசாலை மாணவர்கள், முதியவர்கள், நோயாளிகள் என பலரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். எனவே, அம்மக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பல வருடங்கள் சென்றும் வீதி புனரமைக்கப்படாததால் பலர் அப்பகுதியை விட்டே வெளியேறியுள்ளனர். மேலும் சிலர் நகர் பகுதிகளுக்கு சென்று வாடகை வீடுகளில் வசித்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
