பதுளை, பசறை – றோபேரி பிரதான வீதியில் கொக்காகலை முதல் றோபேரி வரையான சுமார் 9 கிலோ மீற்றர் தூரம் குன்றும், குழியுமாக காணப்படுகின்றது. இப்பகுதியில் வீதி படு மோசமாக காணப்படுவதால் குறித்த தூரத்தை கடப்பதற்கு வாகனங்களுக்கு இரண்டு மணித்தியாலங்கள்வரை தேவைப்படுகின்றன.

5 தசாப்தங்களுக்கு மேலாக இதே நிலையில்தான் வீதி காணப்படுவதாகவும், இது தொடர்பில் பல தரப்புகளிடம் முறையிட்டும் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என பிரதேச மக்கள் உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச ஆட்சிகாலத்தில் வீதி புனரமைப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகள் இடம்பெற்றாலும் அரசியல் குழப்பத்தால் அவை கைவிடப்பட்டன. எனவே, வீதியை புனரமைத்து தருமாறு அரசிடம் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மீகலை, ராகலை, எலமான பகுதிகளில் வாழும் மக்கள் றோபேரி பகுதிக்கு ஆட்டோவில் வருவதாக இருந்தால் 2 ஆயிரத்து 500 ரூபாவுக்கு மேல் அறிவிடப்படுகின்றது. ஏனெனில் வீதி அந்தளவுக்கு படுமோசமாக காணப்படுகின்றது.
றோபேரி பகுதியில்தான் வைத்தியசாலை, பாடசாலை, தபால் நிலையம் என முக்கிய நிறுவனங்கள் அமைந்துள்ளன. பாடசாலை மாணவர்கள் வாடகை வீடுகளில் தங்கி இருந்து படிப்பதாக இருந்தால் அதற்கும் பெருந்தொகை அறிவிடப்படுகின்றது.

நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், சிறார்கள் என பலரும் இந்த வீதி பிரச்சினையால் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கின்றனர். எனவே, மக்களின் கோரிக்கையை ஏற்று வீதி புனரமைக்கப்பட வேண்டும்.
தகவல் – Sarvan Jana










