வலிந்து சென்று பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்காது அரசு – நீதி அமைச்சர்

” அரசமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் இதுவரையில் மாகாணங்களுக்கு பகிரப்படாத அதிகாரங்களை வலிந்துசென்று பகிர்வதற்கு அரசு தயாரில்லை. நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்தால் மட்டுமே இதற்கான நடவடிக்கையை ஜனாதிபதி மேற்கொள்வார்.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டமென்பது எமது நாட்டு அரசமைப்புக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். அப்போதைய சூழ்நிலையில் அதனை ஏற்க வேண்டிய நிலை ஜே.ஆர்.ஜயவர்தனவுக்கு ஏற்பட்டது. இது சிறந்த தீர்வு என இந்தியாவும் நம்பியது.

13 ஆவது திருத்தச்சட்டம் என்பது எமது அரசமைப்பின் ஓர் அங்கம். எனினும், அதிலுள்ள சில அதிகாரங்கள் (பொலிஸ் , காணி) மத்திய அரசிடமிருந்து மாகாணங்களுக்கு பகிரப்படவில்லை. அந்த அதிகாரங்கள் வேண்டும் என வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல்வாதிகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது சம்பந்தமாக சர்வக்கட்சி கூட்டத்தை நடத்தி ஆலோசனை பெறலாம், இறுதியில் நாடாளுமன்றம் முடிவெடுக்கும் என ஜனாதிபதி பதிலளித்தார். மாறாக 13 தொடர்பான பேச்சை வலிந்துசென்று அரசு ஆரம்பிக்கவில்லை. 13 இல் இதுவரை வழங்காத அதிகாரங்களை வழங்க அரசு தயாராகவும் இல்லை. நாடாளுமன்றம் அனுமதி வழங்காத எதையும் இது விடயம் தொடர்பில் ஜனாதிபதி செய்யமாட்டார்.

வடக்கு, கிழக்கு மக்களின் நிலைப்பாடும், அங்குள்ள அரசியல்வாதிகளின் நிலைப்பாடும் வேறுபட்டவை. வடக்கு, கிழக்கில் இருந்து படைகளை அகற்ற வேண்டும் என கூட்டமைப்பினர் கூறுகின்றனர். ஆனால் படை முகாமைகள் அகற்றப்படக்கூடாது என மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அதேபோல டக்ளஸ், பிள்ளையான் தரப்பிடமும் மாறுபட்ட கருத்துகள் உள்ளன. ” – எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles