நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்றிரவு 11.30 வரை இந்த அபாய நிலைமை காணப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் கடும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு கடும் மழையுடனான வானிலை நிலவும் சந்தர்ப்பங்களில், கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர், இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக எதிர்வு கூறப்படுகின்றது.
சில பகுதிகளில் 100 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி இன்றைய தினத்தில் பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.










