“ ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணையுங்கள். தொகுதி அமைப்பாளர் பதவியை தருகின்றேன்.”

இவ்வாறு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்காரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமைச்சர் பஸில் ராஜபக்ச.
ஆளுங்கட்சி குழுக்கூட்டத்தின்போது,
“இரத்தினபுரி மாவட்டத்தில், எனது தொகுதியில் எனக்கு தேவையான ஒரு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நியமிக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. “ என்று வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார். அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சியும் இந்த கருத்தை ஆமோதித்தார்.
இதன்போது குறுக்கிட்ட அமைச்சர் சரத் வீரசேகர, நியமனம் என்பது முறையாக நடக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
“ தமக்கு தேவையான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஒருவரை நியமித்துக்கொள்வது வழமை. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் அப்படிதான் நடக்கும்.” என பஸில் அவ்வேளை குறிப்பிட்டுள்ளார். பஸிலின் கருத்துடன் பிரதமரும் உடன்பட்டுள்ளார்.
இவ்வேளையிலேயே, அமைச்சர் வாசு, நீங்கள் எங்கள் பக்கம் வாருங்கள். உங்களுக்கு தொகுதி அமைப்பாளர் பதவியை தருகின்றேன் என பஸில் சிரித்தப்படி கூறியுள்ளார்.
