வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி
யாழ். சிறைக்குள் உயிர்மாய்ப்பு!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலை வழக்கின் முக்கிய மரண தண்டனைக் கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் (வயது 46), இன்று திங்கட்கிழமை யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் குளியலறையில் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
உயர்நீதிமன்றத்தால் மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட பின்னர், யாழ். மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு மேல் நீதிமன்ற தீர்ப்பாயத்தால் விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து, எதிர்த்தரப்பால் உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த மேன்முறையீட்டைக் கடந்த 6ஆம் திகதி ஆராய்ந்த பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம், ஜெயக்குமார் உள்ளிட்டவர்களின் மரண தண்டனையை இறுதி செய்து தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, தண்டனையை மீளவும் உறுதிப்படுத்தும் சட்ட நடைமுறைக்காகக் கைதிகள் இன்று யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தனர். இதற்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை மரண தண்டனைக் கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டிருந்தார்.
இன்று காலை நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் முன்னெடுத்திருந்த வேளையில், குளிப்பதற்காகச் சென்ற ஜெயக்குமார், குளியலறைப் பகுதியில் தூக்கிட்டுத் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
மரண தண்டனைக் கைதியின் திடீர் மரணத்தைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் உசைன் யாழ். சிறைச்சாலைக்கு நேரில் சென்று ஆரம்பகட்ட விசாரணைகளை முன்னெடுத்தார்.
இந்த விசேட விசாரணையின் போது சட்ட வைத்திய அதிகாரி, தடயவியல் பொலிஸார், குற்றத் தடுப்புப் பொலிஸார் மற்றும் சிறைச்சாலை உயர் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
நீதிவானின் உத்தரவுக்கமைய, சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி புங்குடுதீவில் பாடசாலைக்குச் சென்ற மாணவி கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
2017ஆம் ஆண்டு நடைபெற்ற ‘ரயல்-அட்-பார்’ தீர்ப்பாய விசாரணையின் போது, முதலாவது சகோதரன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கிடமின்றி நிரூபிக்கப்படாமையால் விடுவிக்கப்பட்டார்.
இரண்டாவது சகோதரன், மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிலிருந்த நிலையில், அண்மையில் நோய்வாய்ப்பட்டு சிறையிலேயே உயிரிழந்தார்.
மூன்றாவது சகோதரனான ஜெயக்குமார், மரண தண்டனை உயர்நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சிறைக்குள் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதன் மூலம் இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களில் இருவரும் சிறையிலேயே உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.










