இந்தியாவின் பிரபல மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட், மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டிக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் இம்முடிவை அவர் எடுத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பெண்களுக்கான ஃப்ரீஸ்டைல் மல்யுத்தத்தில் 50 கிலோ பிரிவில் வினேஷ் போட்டியிட்டார். ஆனால் நேற்று காலை எடையை அளவிடும் போது, அவரது எடை அனுமதிக்கப்பட்ட வரம்பை விட 100 கிராம் அதிகமாக இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
இந்தியக் குழு கூடுதல் அவகாசம் கேட்டது, ஆனால் அவரால் எடையைக் குறைக்க முடியவில்லை, எனவே தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ”அம்மா, எனக்கு எதிரான போட்டியில் மல்யுத்தம் வென்று விட்டது, நான் தோற்று விட்டேன். என் தைரியம் எல்லாம் உடைந்து விட்டது, எனக்கு இப்போது வலிமை இல்லை. குட்பை மல்யுத்தம், 2001-2024” என தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
”நான் உங்கள் அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மன்னித்து விடுங்கள்” எனவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.