விரைவில் வீடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்: பொன்சேகா பரபரப்பு அறிவிப்பு

வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற உரையாடல் தொடர்பான காணொளி தன் வசம் இருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

முன்னாள் படை அதிகாரிகள் சிலருடன் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்பொன்றிபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” 17 ஆம் திகதி காலை மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, பஸில் ராஜபக்ச ஆகியோர் எரிக் சொல்ஹைம், சர்வதேச மன்னிப்பு சபை பிரதிநிதி, ஐசிஆர் பிரதிநிதி ஆகியோருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகளை சரணடைய வைப்பதற்குரிய வழிமுறை பற்றி இதன்போது ஆராயப்பட்டுள்ளது. இதன்போதுதான் வெள்ளைக்கொடி ஏந்தி வருதல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.

எனினும், பயங்கரவாதிகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்பதே எனது கட்டளையாக இருந்தது. ஏனெனில் சரணடைய வைத்திருந்தால் பிரபாகரனை மஹிந்த ராஜபக்ச முதலமைச்சர் ஆக்கி இருக்கக்கூடும். கேபி, பிள்ளையான் ஆகியோருக்கு தாலாட்டப்பட்டதுபோல செய்யப்பட்டிருக்கும்.

மேற்படி சந்திப்பு தொடர்பில் ஊடகவியலாளர்களும் அறிந்திருந்தனர். என்னிடம் வீடியோவொன்று உள்ளது. அதனை விரைவில் வெளியிடுவேன்.
‘ 17 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச, சவேந்திர சில்வாவுக்கு தொலைபேசி அழைப்பொன்றை ஏற்படுத்தியுள்ளார்.

குறித்த அழைப்பை எடுத்து கதைத்த பின்னர் தொலைபேசியை சவேந்திர சில்வா வைத்துள்ளார். அவரை சூழ ஊடகங்களின் கமராக்கள் இருப்பதை அவர் மறந்திருந்தார்.
‘ பாதுகாப்பு செயலாளரே எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார், சரணடைவதற்கு வெள்ளைக்கொடி ஏந்தி வருவது பற்றி கலந்துரையாடப்பட்டது எனக் கூறினார்.

நாம் எல்லோரையும் கொல்வோம் என்றெல்லாம்.” என்றெல்லாம் தனக்கு முன்னால் இருந்த அதிகாரிகளிடம் சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனக்கு இராணுவத்தினர் இது பற்றி தெரியப்படுத்தவில்லை. களத்தில் இருந்தவர்களுக்குதான் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் இவற்றை செவிமடுத்துக்கொண்டிருந்தனர். ஒலிப்பதிவு செய்யப்பட்டது என்னிடமும் உள்ளது. விரைவில் அதனை வழங்குவேன்.
இவற்றை செவிமடுத்துக்கொண்டிருந்த ஊடகவியலாளர்கள்தான் வெள்ளைக்கொடி பற்றி கதைத்தனர்.

2010 ஜனாதிபதி தேர்தலின்போது பிரட்ரிக்கா ஜேம்ஸ் என்ற பத்திரிகை ஆசிரியர் என்னை நேர்காணல் செய்வதற்கு வந்திருந்தார்.
‘ வெள்ளைக்கொடி ஏந்தி வருவபர்கள்மீது சூடு நடத்தும் கதை ஏதும் இருந்ததா” என வினவினார்.

இது பற்றி ஏற்கனவே இரு ஊடகவியலாளர்கள் என்னிடம் வினவினர் என்று மாத்திரமே நான் பதிலளித்திருந்தேன். இதை மட்டும்தான் நான் கூறினேன். ஆனால் வெள்ளைக்கொடி ஏந்தி வருபவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்துமாறு நான் கூறினேன் என அவர் செய்தி வெளியிட்டார். இது அப்பட்டமான பொய்யாகும். எனக்கு எதிராக சேறு பூசுவதற்காகவே வெள்ளைக்கொடி வழக்கு பயன்படுத்தப்பட்டது.” – என்றார் பொன்சேகா.

Related Articles

Latest Articles