நாட்டில் நிலவிய கடும் மழையுடன்கூடிய சீரற்ற காலநிலையால் கடந்த சில வாரங்களாக சாதாரண மரக்கறிகளின் விலைகள்கூட உச்சம் தொட்டன. வழமையாக 500 ரூபா 600 ரூபாவுக்கு வாங்கக்கூடிய ஒரு கிலோ மரக்கறி விலைகூட ஆயிரம் ரூபாவை கடந்தது. குறிப்பாக ஒரு கிலோ கரட்விலை 2,500 ரூபாவையக் கூட தாண்டியிருந்தது.
தற்போதும் விலையில் பெரியளவு மாற்றம் இல்லை. அதிகரித்த வேகம் அவ்வாறே காணப்படுகின்றது. இதனால் சில்லறை வியாபாரிகளும், நுகர்வோரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா மத்திய சந்தைக்கு வரும் அதிகமான நுகர்வோர் சாதாரண விலையில் உள்ள பலாக்காய், ஈரப்பலாக்காய் , மரவள்ளிக்கிழங்கு, வட்டக்காய் போன்றவற்றையும், வல்லாரை, பொன்னாங்கன்னி, நாட்டுக்கீரை, பசளி போன்ற சாதாரண கீரை வகைகளையும் அதிகளவில் கொள்வனவு செய்கின்றனர்.

இதனால் ஏனைய பொருளாதார நிலையங்களில் இருந்து அதிக விலையில் மரக்கறிகளை கொள்வனவு செய்து, நுவரெலியா மத்திய சந்தைக்கும் , நானுஓயா பிரதான நகருக்கும் கொண்டு வந்து சிறிய இலாபத்தினை வைத்து விற்பனை செய்யும் வியாபாரிகள், வியாபாரம் இன்றி பரிதவிக்கின்றனர். தமக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
” மரக்கறி விலைகள் அதிகரித்துள்ளதால், கூலித்தொழில் செய்யும் சாதாரண மக்கள் குறைந்த விலையில் உள்ள மரக்கறிகளை தேடுகின்றனர். சொற்ப அளவு கேட்கின்றனர். இதனால் வியாபாரம் செய்ய முடியாத நிலை காணப்படுகின்றது. எமக்கு பெரும் நஷ்டம் ஏற்படுகின்றது.” – என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் வெளி மாவட்டத்தில் இருந்து அதிக விலைக்கு கொள்வனவு செய்து மரக்கறிகளை குறைந்த விலைக்கே விற்பனை செய்கின்றோம் . ஆனால் நுகர்வோரின் வருகை குறைவாகவே காணப்படுகின்றது. இதனால் மிஞ்சும் மரக்கறிகளை குப்பையில் போடவேண்டியதாக இருக்கிறது என அங்கலாய்ந்துக்கொள்கின்றனர்.
தொடர்ந்து இவ்வாறு மரக்கறிகளை மொத்த விலைக்கு கொள்வனவு செய்து குறைவான விலைக்கு விற்பனை செய்வதால் தங்களுக்கு எந்த இலாபமும் இல்லை. இதில் மின்சாரப் பட்டியல் கட்டணத்தைக் கட்டுவதா அல்லது வீட்டுச் சுமையைச் சரி செய்வதா, கடைக் கூலியைக் கட்டுவதா, கடையில் தொழிலுக்கு வருபவர்களுக்கு சம்பளம் வழங்குவதா ? என்ற வினா அனைத்து மரக்கறி வியாபாரிகள் மத்தியிலும் எழுந்துள்ளன.
அத்துடன் நுவரெலியா , நானுஓயா பிரதான நகரில் ஒரு சில மரக்கறி விற்பனை நிலையங்களில் பாவனைக்குதவாத அழுகிய நிலையில் மரக்கறிகளை வர்த்தக நிலையங்களுக்கு முன் சேர்த்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவை மேலும் பழுதடைந்து துர்நாற்றம் வீசுவதாக விமசனம் தெரிவிக்கப்படுகின்றது.
நானுஓயா நிருபர்










