விவசாயம், வர்த்தகம், சுற்றுலா ஆகிய துறைகளில் ஈடுபட விரும்பும் எமது சமூக இளைஞர், யுவதிகள் ஆகியோர் அத்துறைகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளதென்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவ் அறிக்கையில் “மேற்படி தொழிற் துறையில் ஆற்றலுள்ள எமது சமூக இளைஞர் சமூகத்தினருக்கான அடிப்படை வளங்களை அரசிடமிருந்து பெறக்கூடிய வாய்ப்புக்கள் இருந்து வருகின்றன.
அத்துடன் தொழில் முயற்சி ஆற்றல்களை விருத்தி செய்வதற்கான வசதிகளும் கிடைக்கவுள்ளன. மேலும் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதே மேற்படி திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்;டத்தின் ஊடாக தொழில் முயற்சிகளில் ஈடுபடுவோருக்கு பெருமளவிலான ஆதாயமும் கிடைக்கவுள்ளது.
ஆகவே 18 வயது தொடக்கம் 45 வயதுள்ள இலங்கை பிரஜைகளிடமிருந்து காணி அமைச்சு விண்ணப்பப்பங்களை கோருகின்றன. இதன் இறுதித் திகதி இம்மாதம் 31 ஆம் திகதியாகும். அத்திகதிக்குள் விண்ணப்பங்களை பூரணப்படுத்தி, பதிவுத்தபால் மூலம் காணி முகாமைத்துவம் சுற்றுலா அரச தொழில் முயற்சி காணிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கு அனுப்பப்படல் வேண்டும்.
இதற்கான மேலதிக விபரங்களை மலையக மக்கள் முன்னணியின் பிரதேச சபை உறுப்பினர்கள், அமைப்பாளர்கள் மற்றும் காரியால உத்தியோகத்தர்கள் ஊடாகவும்,விண்ணப்பப்படிவங்களை பெற்றுக்கொள்ள முடியும். இச்சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்தி கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றேனென்று மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எம். செல்வராஜா, பதுளை
