வீட்டுப் பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று ஆரம்பிக்கப்படல் வேண்டுமென, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார், தொழில் அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவிற்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதமொன்றில், குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அக்கடிதத்தில்,
‘வீட்டுப் பணியாளர்களாக சேவைகளில் ஈடுபடுத்தப்படுபவர்கள் மற்றும் சேவைகளை பெறுனர்கள் ஆகிய இரு தரப்பினர் விடயங்களில், கூடிய கவனம் செழுத்தப்படுவதுடன், நடைமுறையிலுள்ள சட்ட திட்டங்களிலும், கடும் திருத்தங்கள் கொண்டு வரப்படல் வேண்டும்.
இலங்கையின் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு போன்ற பல்வேறு பிரதேசங்களில், பெருமளவிலான வீடுகளில் மலையகத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டுப் பணிப்பெண்களாகவும், சுத்திகரிப்பு பணியாளர்களாகவும், குழந்தைகளைப் பராமரிப்பவர்களாகவும், காவல் பணியாளர்களாகவும், தோட்ட பணியாளர்களாகவும் இருந்து வருகின்றனர்.
வறுமையின் காரணமாக, இவர்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இம்சைகள், அச்சுறுத்தல்கள், வல்லுறவுகள் மத்தியில் மேற்குறிப்பிட்ட பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாகக் கூறின், இவர்கள் சொல்லொண்ணாத் துயரங்களை, நாளாந்தம் எதிர்நோக்கிய நிலையிலேயே, இருந்து வருகின்றனர்.
தற்போது இச்செயற்பாடுகள் நாடளவிய ரீதியில், பேசும் பொருளாகவே மாறியுள்ளது.
மலையகப் பெற்றோரின் அப்பாவி நிலை, அவர்களின் வறுமை, போதிய கல்வியறிவின்மை ஆகியனவற்றை பயன்படுத்தி, அவர்களை ஏமாற்றி, அவர்களின் சிறு வயதுகளைக் கொண்ட பிள்ளைகள் வீட்டுப்பணியாளர்களாக கொண்டு செல்லப்படும் நிலை உருவாகியுள்ளது. ஆகையினால், இது விடயத்தில் கூடிய கவனம் செழுத்த வேண்டியதும், அவசியத் தேவையாக இருந்து வருகின்றது.
வீட்டுப்பணியாளர்களாக செல்வோர், அவர்களின் பாதுகாப்பு கருதி, அவர்களுக்கென்று தொழில் திணைக்களத்தில் விசேட தனிப்பிரிவொன்று அமைக்கப்படல் வேண்டும். வீட்டுப்பணியாளர்களாக செல்வோர், தொழில் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டியதும் அவசியமாகும். அத்துடன், பணியாளர்களாக செல்லும் பிரதேசத்தின் பொலிஸ் நிலையத்திலும், தாம் வசிக்கும் இடத்திலுள்ள பொலிஸ் நிலையத்திலும், பணியாளர்களாக செல்வது குறித்த பதிவு செய்து கொள்ளல் வேண்டும்.
சேவை பெறுனர்களின் குடும்பப் பின்னணி, தொழில், அவரது வீட்டில் இருப்போர், அவர்களின் சொத்துக்கள் ஆகியனவற்றையும், பணியாளர்கள் அறிந்திருக்க வேண்டும். அதேபோன்று, வீட்டுப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களின் குடும்ப பின்னணி உள்ளிட்ட அனைத்து விடயங்களும், சேவை பெறுனர்களும் அறிந்திருக்க வேண்டும்.
தினமொன்றுக்கு எட்டு மணித்தியாலயங்கள் என்ற வகையில், பணியாற்றும் காலம் அமைய வேண்டும். அம் மணித்தியாலங்களுக்கு மேல் பணியாற்றும் நிலை ஏற்படுமேயானால், அதற்கு மேலதிக கொடுப்பனவுகள் வழங்கப்படல் வேண்டும்.
வீட்டுப்பணியாளர்களாக ஆறு மாதங்களுக்கு மேல் பணியாற்றினால், அவரது வேதனத்திற்கு மேலாக, சேவைகாலப்பணம் வழங்கப்பட வேண்டியதும் கட்டாயமாகும். அத்துடன் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளான ஊழியர் சேமலாப நிதி ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியமும் வழங்கப்படல் வேண்டும். வீட்டுப்பணியாளர்களாக செல்வோர், அவரது உடல் நிலை குறித்த வைத்திய சான்றிதலும், பெற்றுகொள்ளல் வேண்டும்.
70 வயதுகளுக்கு மேற்பட்டவர்களும், 18 வயது வயதுகளுக்கு கீழ்ப்பட்டவர்களும் வீட்டுப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்படக்கூடாது அந்நிலை மீறப்படும் பட்சத்தில், சேவை பெறுனர்களுக்கு எதிராக, கடும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும். வீட்டுப்பணியாளர்களாக ஈடுபடுத்தபடுபவர்களுக்கு முறையான தங்குமிடம், மற்றும் உணவு, உட்கட்டமைப்பு வசதிகளை, சேவை பெறுனர்கள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
சிறு பிள்ளைகள் இருக்கும் தாய்மார்களை, வீட்டுப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்படக்கூடாது. அப்படியே ஈடுபடுத்தப்படும் பட்சத்தில், அத்தாயின் சிறுபி;ள்ளைகளுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படல் வேண்டியதும் அதிமுக்கியமாகும்.
மேற்கண்ட நிபந்தனைகள் முறையாகவும், கிரமமாகவும் செயல்படுத்தப்படுகின்றதா என்பது குறித்து தொழில் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அமைக்கப்படும் விசேட தனிப்பிரிவொன்றினால், இடைக்கிடை பரிசீலனைகள் செய்யபடல் வேண்டும்.
ஆகவே, மேற்கண்ட விடயங்கள் குறித்து கூடிய அக்கறை செழுத்தி, செயல்படும் பட்சத்தில், வீட்டுப்பணியாளர்களாக ஈடுபடுத்தப்படுபவர்களுக்கு, பாதுகாப்பு முழுமைப்படுத்தப்படும். அத்துடன், அவர்களது வாழ்விலும் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்படுமென்பதில் சந்தேகமில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், இது குறித்து பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் கருத்து தெரிவிக்கையில், ‘ மேற்படி வீட்டுப்பணியாளர்கள் விடயமாக பாராளுமன்றத்திலும், தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உரையாற்றுவதுடன், அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவுபடுத்துவேன் என்று’ குறிப்பிட்டார்.










