இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கிண்ண அரையிறுதிப் போட்டியில் 10 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மெல்போர்னில் நடைபெறும் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
அடிலெயிட்டில் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 169 ஓட்ட சவாலான இலக்கை இங்கிலாந்து அணி எந்த விக்கெட்டையும் இழக்காது 4 ஓவர்களை மிச்சம் வைத்து எட்டியது.
இதன்போது ஆரம்ப வீரர்களான அணித்தலைவர் ஜொஸ் பட்லர் 49 பந்துகளில் ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆட்டமிழக்காது 47 பந்துகளில் 86 ஓட்டங்களையும் பெற்றனர். இதன்போது இந்திய பந்துவீச்சாளர்களை இன்னிங்ஸ் ஆரம்பித்தது தொட்டு துவம்சம் செய்த இந்த இரு வீரர்களும் மொத்தம் 10 சிக்ஸர்களை விளாசினார்கள்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியா அதிரடியாக 33 பந்துகளில் 63 ஓட்டங்களை விளாசி இருந்தார். அதேபோன்று விராட் கொஹ்லி 40 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றார். இதன்மூலம் இந்திய அணி 20 ஓவர்களுக்கும் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களை பெற முடிந்தது.
இந்திய அணி சுப்பர் 12 சுற்றுப் போட்டியின் குழு இரண்டில் முதல் அணியாகவே அரையிறுதிக்கு முன்னேறியபோதும் அந்த அணியின் பந்துவீச்சு முழுமையாக செயற்படவில்லை.
இதனால் 1992 ஒருநாள் உலகக் கிண்ண இறுதிப் போட்டியை பிரதிபலிப்பது போன்று இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் ஆடவுள்ளன. அந்த இறுதிப் போட்டியும் மெல்போர்ன் மைதானத்திலேயே நடைபெற்றது.
எனினும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தை இதற்கு முன்னர் ஒரு தடவை கைப்பற்றிய நிலையில் இரண்டாவது முறை அதனை வெல்லும் முயற்சியாகவே களமிறங்கவுள்ளன.










