வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்றிரவு(19) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 5ஆவது மாடியில் நேற்றிரவு 11 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரே துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ரிவோல்வர் ரக கைத்துப்பாக்கியினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த நபரே துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Related Articles

Latest Articles