வெள்ளத்தினால் பதுளை மாவட்டத்தில் பலத்த சேதம்

பதுளை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று  பிற்பகல் (29) வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பதுளு ஓயா ஆறு மற்றும் ஓடைகளில் மழைநீர் அதிகரித்து வெள்ளமாக மாறியதன் காரணமாக எல்ல தொடக்கம் ஹாலிஎல வரையான ஆற்றோர பகுதிகளில் உள்ள பொது மக்கள் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஈ.எம். எல் உதயகுமார தெரிவிக்கின்றார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த ,

பதுளை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரதேசங்களில் பெய்து வரும் மழையானது வேறுப்பட்ட அளவுகளில் பெய்து வருகின்றது. இதன்காரணமாக பிரதேசத்தின் மழைவீழ்ச்சியின் அளவு தொடர்பாக அறிய நாம் பல்வேறு பகுதிகளில் 300மழைமானிகளை தாபித்துள்ளோம்.

மழைவீழ்ச்சி குறித்த அளவை விட அதிகரித்து செல்வதை அவதானித்தால் மக்கள் அவதானித்தால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயிற்சி ஆலோசனைகளுக்கு அமைய அத்தியாவசிய உடமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தங்குமாறு ஆலோசனை வழங்குகின்றோம்.

இதேவேளை நேற்று  பெய்த கடும் மழையின் காரணமாக ஆற்றோரமாக வசித்து வந்த மக்களின் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளதுடன், அதிகரித்த வெள்ளம் காரணமாக சேதமடைந்த தெமோதரை-உடுவரை நீர்த்தேக்கத்தின் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் துரித கதியில் பழுதுபார்க்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு, எல்ல நகர் வழியாக நமுனுகுல செல்லும் பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து தடையை சீராக்கும் முகமாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஜே.சீ.பி இயந்திரங்களை கொண்டு மண்மேடுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.

பல்வேறு பகுதிகளில் மண்மேடுகள் சரிந்து நீரோடைகளும் பெருக்கெடுத்துள்ளன. எனவே அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படும் போது பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 0552224751, 0773957880 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்தார். பிரதேச செயலக மட்டத்தில் அனர்த்த சேதங்கள் தொடர்பாக அறிய கிராம சேவை உத்தியோகத்தர்கள் படிவங்களை வழங்கி தகவல் திரட்டி வருவதை அவதானிக்க முடிந்தது.

Related Articles

Latest Articles