வெள்ளவத்தை “கற்பகம்” காட்சியறையானது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பால் வெள்ளவத்தை பொஸ்வெல் பிளேஸில் செவ்வாய்க்கிழமை(04) நவீன வசதிகளுடன் மீள திறந்து வைக்கப்பட்டது.
1985 ஆம் ஆண்டு முதல் தலைநகர் கொழும்பு, வெள்ளவத்தையில் இயங்கி வந்த “கற்பகம்” பனை சார்ந்த உற்பத்திகள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையமானது கடந்த சில மாதங்களாக மூடப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் பனை அபிவிருத்தி சபையின் “கற்பகம்” வெள்ளவத்தை காட்சியறையை நவீன வசதிகளுடன் மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காட்சியறையை திறந்து வைத்து உரையாற்றிய பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்,
வடக்கு, கிழக்கு மக்களின் கற்பகத்தருவான பனையானது அம்மக்களின் வாழ்வாதாரத்திற்கு தேவையான பல பொருட்களை அள்ளித் தருவதோடு கலாசாரம், பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கையுடன் மிகவும் பின்னி பிணைந்துள்ளது.
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையிலும் கூட வடக்கு கிழக்கில் சமூக பொருளாதாரத்தில் பனை முக்கிய பங்கு வகித்தது.
வெள்ளவத்தையில் மீளத் திறக்கப்பட்டுள்ள இக் காட்சியறை மூலம் தலைநகரில் வாழும் மக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாட்டவர்கள் ஆகியோர் வடக்கு, கிழக்கு மக்களின் பனை சார்ந்த உற்பத்திகள், பனை அபிவிருத்தி சபையின் உற்பத்தி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக அமையும் எனவும் தெரிவித்தார்.
பனை சார்ந்த உற்பத்தி பொருட்களை நாடு முழுவதும் கொண்டு செல்வதற்கு “கற்பகம்” காட்சியறைகளை விஸ்தரிக்க தீர்மானங்கள் மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட பிரதி அமைச்சர், பனை சார்ந்த உற்பத்திகளை மேற்கொள்வதற்கு நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதன் உற்பத்திகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
வீண் விரயங்களைக் குறைத்து வருமானங்களை அதிகரிக்க அர்ப்பணிப்புடன் தங்களது கடமைகளை மேற்கொள்ளுமாறும் ஊழியர்களிடம் பிரதி அமைச்சர் கேட்டுக்கொண்டார்.










